தங்கள் இரண்டு அறைகள் கொண்ட மண் வீட்டின் கதவருகே பாயில் அமர்ந்துகொண்டு கந்தி டெப்குருவும், அவரது மகள் தன்மதியும் அரிசி உமியை சிவப்பு நூல்கொண்டு பின்னுவதில் மூழ்கியிருந்தனர். பின்னர் மூங்கில் இழைக்கொடியில் கட்டி, ஒன்றாக சேர்த்து மாலையாக தைத்திருந்தனர். இதை கந்தியின் கணவர் கோபிநாத் டெப்குரு, லட்சுமி சிலை செய்வதற்கு பயன்படுத்துவார்.
கோபிநாத் லேசான கயிறு கட்டிய இசை கருவியுடன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். கந்தியும், தன்மதியும் நெல் மாலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர். அவர் அந்த லேசான கயிறை மீட்டி லட்சுமி புராணத்தில் உள்ள சில வரிகளை பாடுகிறார். “தானியங்களின் கடவுளான லட்சுமி தேவியின் வடிவங்களை நெல்லால் செய்வதையும், அவரின் மகிமையை புகழ்ந்து பாடுவதையும் நாங்கள் பாரம்பரியமாக செய்து வருகிறோம்“ என்று 35 வயதான கந்தி விளக்குகிறார். அவரும், அவரது குடும்பத்தினரும் டெப்குரு அல்லது தேவ்குனியா இனத்தைச் சேர்ந்த பாரம்பரிய கவிஞர்கள். அவர்கள் ஒடிசாவில் உள்ள நுவாபடா மாவட்டத்தில் உள்ள குத்பெஜா கிராமத்தில் வசிக்கின்றனர்.
ஓலைச்சுவடியின் கையெழுத்து பிரதி ஒன்றை என்னிடம் காட்டி, டெப்குரு இனத்தினர், லட்சுமி புராணத்தை தங்களின் முன்னோர்களிடம் இருந்து கற்றதாக 41 வயதான கோபிநாத் கூறுகிறார். லட்சுமி புராணம், பல்ராம் தாசால் இயற்றப்பட்ட 15ம் நூற்றாண்டை சேர்ந்த பாடல். அது பெண்கடவுளான லட்சுமி மற்றும் அவர் ஜகன்நாதரை மணந்துகொண்ட புராணத்தை பற்றி கூறுகிறது. மேலும் அவர் பின்பற்றிய சடங்குகள் மற்றும் விரதங்கள் குறித்து விளக்குகிறது. ஒற்றை மெல்லிய இழை உள்ள லட்சுமி வீணையை இசைத்துக்கொண்டே, கோபிநாத் லட்சுமி புராண பாடலை பாடுகிறார். (அது பிரம்ம வீணை அல்லது டெப்குரு பனா என்றழைக்கப்படுகிறது). டெப்குருக்கள் மூன்றடி நீளமுள்ள இந்தக்கருவியை சுரைக்காய் மற்றும் மூங்கிலால் செய்கிறார்கள்.




