“நான் வளர்ந்து வந்த நேரத்தில் இங்கு வட்டிக்கு பணம் அளிப்பவர்கள் அதிகமாக இல்லை. ஆனால், இப்போது பல விவசாயிகள் இயந்திரங்களை வாங்குவதற்கும், பூச்சிமருந்துகளையும் உரங்களையும் வாங்குவதற்காக கடன் வாங்குகிறார்கள்” என்கிறார் பட்கான் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சுலியா.
“நான் மாட்டுச் சாணத்தை உரமாகப் பயன்படுத்தினோம். அதுதான் மண்ணுக்கு நன்மை செய்தது. அதிகமாக செலவாகவுமில்லை. கூடுதல் மகசூல் பெறுவீர்கள் என்று சொல்லி அரசு தரப்பில்தான் பூச்சிமருந்துகளையும், உரத்தையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்கள். இப்போது, 40 வருடங்களுக்குப் பிறகு, தொடர்ந்து பூச்சி மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்திய பிறகு மண்ணின்தன்மை கெட்டுவிட்டது. சொற்ப லாபத்துக்கு காய்கறிகளை சந்தையில் விற்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் விற்பதைவிட மிகக் குறைந்த அளவிலான பணத்தையே தரகர்கள் தருகிறார்கள். அதனால், இறுதியில் விவசாயிகள் மிகக் குறைவான வருவாயையே பெறுகிறார்கள்” என்கிறார், வருத்தத்துடன்.
மத்திய பிரதேசத்தின் நிவாலி தாலுக்காவின் சாகட் கிராமத்தில் இருக்கும் ஆதர்ஷிலா கற்றல் மையத்தைப் பார்வையிடச் சென்றபோது, அஞ்சாட் தாலுக்காவைச் சேர்ந்த 83 வயது சுக்லால்ஜியைச் சந்தித்தோம். ஆசிரியராக இருக்கும் அவரது மகன் பத்ரியைப் பார்ப்பதற்காக அவர் அங்கு வந்திருந்தார். கடந்த அரை நூற்றாண்டின் குழந்தைப் பருவ நாட்களைக் குறித்தும், அதன் மாற்றத்தைக் குறித்தும் அறிந்துகொள்வதற்காக நாங்கள் நினைத்தோம். சுக்லால்ஜி நிம்மடி மொழியில் பேசினார். பிலாலா (பட்டியலின பழங்குடியினர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேசும் அம்மொழியை, அவரது மகன் பத்ரி எங்களுக்காக மொழிபெயர்த்தார்.
“மாட்டு வண்டிகள் அந்தக் காலத்தில் இல்லை. எங்கு சென்றாலும் நடந்துதான் சென்றேன். 48 கிலோ எடைப் பொருட்களைச் சுமந்துகொண்டு ஏழு கிலோமீட்டருக்கு நடப்பேன். அப்போது மிதிவண்டிகள் ஆடம்பரமானவை. அரசு அதிகாரி மட்டும்தான் மிதிவண்டியில் கிராமத்துக்கு வருவார். அதைப் பார்ப்பதற்கே நாங்கள் பயப்படுவோம்” என்கிறார் சுக்லால்ஜி, சிறு புன்னகையுடன்.






