ஜூன் 16, 2022 அன்று, அசாமின் நகாவோன் கிராமத்தைச் சேர்ந்த பலரையும் போல, லபா தாஸ் அவநம்பிக்கையுடன் மணல் மூட்டைகளை நனோய் நதி கரைகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். பிரம்மபுத்திரா நதியின் கிளை ஆறான நானோய் கரை தாண்டப் போகும் தகவல் 48 மணி நேரங்களுக்கு முன்பு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தர்ரங்க் மாவட்டத்தின் கரையோர கிராமங்களுக்கு மணல் மூட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருந்தது.
“நள்ளிரவு 1 மணிக்கு (ஜூன் 17) கரை உடைந்தது,” என்கிறார் நகாவோனின் சிபாஜர் ஒன்றியத்தின் ஹிரா சுபுரி குக்கிராமத்தில் வசிக்கும் லபா. “பல்வேறு இடங்களில் கரை உடைந்து கொண்டிருந்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” ஐந்து நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. தென்மேற்குப் பருவமழை மாநிலம் முழுக்க மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அடித்துக் கொண்டிருந்தது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், ‘தீவிர கனமழையை’ (244.5 மிமீ அதிகமான மழை ஒருநாளில்) ஜூன் 16-18ல் எதிர்பார்த்து சிவப்பு நிற எச்சரிக்கையை அசாம் மற்றும் மேகாலயாவுக்கு விடுத்திருந்தது.
ஜூன் 16ம் தேதி இரவு 10.30 மணிக்கு நானோய் தன் சக்தி முழுவதையும் திரட்டி நகாவோனுக்கு ஒரு கிலோமீட்டர் தெற்குப்பக்கம் இருக்கும் கஸ்திபிலா கிராமத்தின் கலிதாபரா குக்கிராமத்துக்குள் புகுந்தது. ஜெய்மதி கலிதாவும் அவரின் குடும்பமும் வெள்ளத்தில் மொத்தத்தையும் இழந்தனர். “ஒரு கரண்டி கூட மிச்சம் இருக்கவில்லை,” என்கிறார் அவர் தகரம் வேயப்பட்ட தற்காலிக தார்ப்பாய் வசிப்பிடத்தின் வெளியே அமர்ந்தபடி. “நெற்களஞ்சியம் மற்றும் மாட்டுக் கொட்டகை உள்ளிட்ட எங்களின் மொத்த வீடுகளும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது,” என்கிறார் அவர்.
அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தினசரி வெள்ளச்சேத அறிக்கையின்படி ஜூன் 16ம் தேதி, 28 மாவட்டங்களைச் சேர்ந்த 19 லட்ச மக்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த இரவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் வாழும் தர்ரங்கும் ஒன்று. நானோய் கரையுடைத்த இரவில் பெகி, மனாஸ், பக்லாடியா, புதிமாரி, ஜியா-பராலி மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய ஆறு நதிகள் ஆபத்தான உயரத்தை எட்டியிருந்தன. அதற்குப் பிறகு ஒரு வாரத்துக்கு கனமழை மாநிலத்தை நாசம் செய்தது.

























