பாலாஜி ஹெட்டாகலே முதல் நாள் கரும்பு வெட்டுகிறார். அடுத்த நாள் அவர் இல்லை. அவர்கள் தங்கள் மகன் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். “இந்த அசாதாரண சூழ்நிலை எங்களை கொல்கிறது“ என்று அவரது தந்தை பாபாசாகேப் ஹெட்டாகலே கூறுகிறார். ஜீலை மாதத்தில் ஒரு மதிய வேளையில், கருமேகங்கள் சூழ்கிறது, அவர்களின் ஒற்றை அறைகொண்ட சிமெண்ட் வீட்டில் அமர்ந்திருக்கும் பாபாசாகேப் பேசுகையில், “அவர் உயிரோடு தான் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா? என்பதுதான் எங்களுக்கு தெரியவேண்டும்“ என்று கூறும்போது அவரது குரலிலே விரக்தி தெரிகிறது.
2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் பாபாசாகேப் மற்றும் அவரது மனைவி சங்கிதா இருவரும் தங்களது 22 வயது மகனை கடைசியாக பார்த்தது. மஹாராஷ்ட்ரா பீட் மாவட்டத்தில் உள்ள காடிவாட்கான் கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தின் கரும்பு வயல்களில் பணி செய்வதற்காக சென்றுவிட்டார்.
மஹாராஷ்ட்ராவின் மராத்வாதா பகுதியில் இருந்து ஆண்டுதோறும், 6 மாதங்கள் மேற்கு மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவிற்கு கரும்பு வெட்ட செல்லும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுள் ஒருவர். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் அவர்களின் கிராமத்தில் இருந்து தீபாவளி முடிந்த நவம்பர் மாதத்தில் கிளம்புகிறார்கள், மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திரும்புவார்கள். அவ்வாறு சென்ற பாலாஜி இந்தாண்டு திரும்பி வரவில்லை.
பாலாஜியின் தாயும், தந்தையும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு புலம்பெயர்ந்து சென்று வேலை செய்து வருகிறார்கள். பாலாஜிக்கு இதுவே முதல் முறை. “நானும், எனது மனைவியும் இருபது ஆண்டுகளாக இடம்பெயர்ந்து சென்று கரும்பு வெட்டும் வேலை செய்து வந்ததோம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பருவத்தில் ரூ.60 முதல் 70 ஆயிரம் வரை சம்பாதிப்போம்“ என்று பாபாசாகேப் கூறுகிறார். “அது ஒன்று மட்டும்தான் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் வருமானம். பீட்டில் தினக்கூலி வேலை சாதாரண நாட்களில் கிடைப்பது கடினமான ஒன்று. இப்போது கோவிட் தொற்றுக்கு பின்னர், அந்த நிலையும் மோசமாகிவிட்டது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
தொற்று காலத்தில், வயல்களிலோ, கட்டிட பணிகளிலோ கூலி வேலை தேடுவது மிகவும் கடினமான ஒன்று. “மார்ச் முதல் நவம்பர் வரை எங்களுக்கு பணம் கிடைப்பது கடினமான ஒன்று“ என்று பாபாசாகேப் கூறுகிறார். கோவிட் - 19 தொற்றுக்கு முன்னர், பீட்டில் உள்ள வட்வாணி தாலுக்காவில் உள்ள அவர்களின் ஊருக்கு திரும்பிய பின்னர், பாபாசாகேபுக்கு வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். அதில் நாளொன்றுக்கு ரூ.300 கிடைக்கும்.
கடந்தாண்டு நவம்பரில் இடம்பெயர்ந்து செல்லும் காலம் வந்தபோது, பாபாசாகேபும், சங்கிதாவும் செல்லவில்லை. ஏனெனில், பாபாசாகேபின் வயதான தாய் நோயுற்றிருந்தார். அவரை நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. “எனவே நாங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் எங்களுக்கு பதிலாக எங்கள் மகன் சென்றார்“ என்று பாபாசாகேப் கூறுகிறார்.









