சதர் நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, சுனிதா தத்தா தனது கணவருடன் அங்கு வந்தார். ஆனால், ஒரு துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்) சுனிதாவை மகப்பேறு அறைக்கு அழைத்துச் சென்றப்போது, அந்த தம்பதியர் விரைவாக ஆரம்ப சுகாதார மையம் பி.எச்.சி (ஆரம்ப சுகாதார மையம் )யை விட்டு வெளியேறினர். "இஸ்மே கைஸ் ஹோகா பச்சா, பஹுத் காண்ட்கி ஹை இதார் [இந்த இடத்தில் நான் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும், இங்கே மிகவும் அசுத்தமாக இருக்கிறது]" என்று, அவர்கள் அங்கு வந்த அதே ரிக்ஷாவில் ஏறும்போது சுனிதா கூறினார்.
"இன்று அவளுக்கு குழந்தை பிறப்புக்கான தேதி - எனவே இப்போது நாங்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்," என்று அவர்கள் ரிக்ஷா புறப்பட்டபோது அவரது கணவர் அமர் தத்தா, கூறினார். இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் சுனிதா தனது மூன்றாவது குழந்தையை பிரசவித்தாள். ஆனால், இந்த முறை, தனது நான்காவது குழந்தைக்கு அவர் வேறு இடங்களுக்குச் செல்ல முடிவு செய்திருந்தார்.
காலை 11 மணியளவில், சதர் ஆரம்ப சுகாதார மையத்தின் மகப்பேறு அறை, ரத்தக் கறை படிந்த தளத்தைத் துடைக்க தூய்மை பணியாளர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது - முந்தைய நாளின் பிரசவத்திலிருந்து இன்னும் அதே கோலத்தில் இருக்கிறது.
"என் கணவர் என்னை அழைத்து செல்வதற்காக நான் காத்திருக்கிறேன். எனது வேலை நேரம் இன்று முடிந்துவிட்டது. எனக்கு இரவு நேரப்பணி இருந்தது, நோயாளிகள் யாரும் இல்லை, ஆனால் கொசுக்கள் காரணமாக என்னால் தூங்க முடியவில்லை ”என்று 43 வயதான புஷ்பா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். புஷ்பா பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் சதர் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் துணை செவிலியர் மருத்துவச்சியாக பணிபுரிக்கிறார். அவர் எங்களுடன் அலுவலகப் பகுதியில் பணியில் இருக்கும் போது இருக்கையில் அமர்ந்தபடி பேசுகிறாள். நாற்காலியின் பின்னால் ஒரு மேஜை அதில் சில காகிதங்கள், மற்றும் ஒரு மர படுக்கை உள்ளன. புஷ்பா தனது பதற்றமான இரவைக் கழித்த அதே படுக்கைதான்.
ஒரு காலத்தில் பழுப்பு நிற கொசு வலையாக படுக்கைக்கு மேலே தொங்கவிடப்பட்டு இருந்தது இப்போது வெளுத்த, பூச்சிகள் எளிதில் நுழைவதற்கு போதுமான பெரிய துளைகளால் சூழப்பட்டுள்ளது. கீழே உள்ள படுக்கை மடித்து தலையணையுடன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது - அடுத்த இரவு நேரப்பணிக்காக துணை செவிலியர் மருத்துவச்சி பயன்படுத்தப்பட வேண்டும்.







