இரண்டு வயது சிறுவன் அலெல், இரண்டாம் ஜான் பால் தெருவில் உள்ள வீட்டின் முன்பக்கத்தில் நின்று கொண்டு அந்த வழியாக வருபவர்களை புன்னகையோடு மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான். அடுத்து வருபவர் தனது அப்பா யேசுதாஸாக இருக்கலாம் என்று அவன் நம்புகிறான்.
அந்தத் தெருவில் சில வீடுகளில் பளபளக்கும் விளக்குகளோடு நட்சத்திரங்கள் அலங்காரமாக தொங்குகின்றன. ஆனால், அஜிகுட்டன் (அலெலுக்கு வீட்டில் அதுதான் செல்லப் பெயர்) இருளில் நிற்கிறான். 33 வயதான அவனது அம்மா அஜிதா , பல நாட்களாக படுக்கையில் அழுதுகொண்டிருக்கிறார். அஜிகுட்டன் அவ்வப்போது அம்மாவோடு இருப்பான். பின்னர் திரும்பவும் வீட்டின் முன்பக்கத்துக்கு திரும்புவான்.
2017ஆம் ஆண்டின் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சற்று முன்னதாக அது நடந்தது. புது உடைகளையும் ஒரு கேக்கையும் வாங்கிக்கொண்டு, கிறிஸ்மஸ் அன்று அப்பா வருவார் என்று அந்த சின்னப் பையனுக்கு அம்மா உறுதியளித்தார். ஆனால், அலெலின் அப்பா இன்னமும் வீடு திரும்பவில்லை.
நவம்பர் 30 ம் தேதி சூறாவளி தாக்கியபோது, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நயாட்டின்கரா தாலுகாவின் கரோட் கிராமத்திலிருந்து புறப்பட்ட மீனவர்களில், 38 வயதான யேசுதாஸ் ஷிமயோனும் ஒருவர். நவம்பர் 29 அன்று மாலையில் அவர் கடலுக்குச் சென்றார். அவரோடு நான்கு பேர்களும் சென்றார்கள். அவர்களில் ஒருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் அலெக்சாண்டர் பொதிதாம்பி (வயது 28). மற்ற மூன்று பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அலெக்ஸாண்டருக்கும் அவரது 21 வயதான மனைவி ஜாஸ்மின் ஜானுக்கும் ஆஷ்மி அலெக்ஸ் என்ற பெயரில் 10 மாத பெண் குழந்தை உள்ளது.






