ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள சிங்கு-டெல்லி எல்லையில் அலைகடலென திரண்டு போராடும் விவசாயிகளை பார்த்து கொண்டிருக்கும் ஹர்ஜீத் சிங்கின் முகத்தில் மங்கலான குளிர்கால வெயில் பட்டுத் தெறிக்கிறது.
அருகில் பெரியவர்கள், இளைஞர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகளும் உள்ளனர் - அனைவரும் பல்வேறு பணிகளில் பரபரப்பாக உள்ளனர். இரண்டு ஆண்கள் இரவு உறங்குவதற்காக கம்புகளை கொண்டு படுக்கையை தட்டிக் கொண்டிருக்கின்றனர். அங்கிருப்பவர்களுக்கு சிலர் தேநீர், பிஸ்கட் விநியோகம் செய்கின்றனர். தங்கள் தலைவர்களின் உரையை கேட்பதற்காக பலரும் பெருங்கூட்டத்தை நோக்கி செல்கின்றனர். சிலர் இரவு உணவிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். சிலர் அங்கும், இங்கும் திரிகின்றனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கும் எதிராக டெல்லியின் வாயில்களில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஹர்ஜீத்தும் ஒருவர்.
பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் மஜ்ரி சோதியான் கிராமத்தில் உள்ள தனது நான்கு ஏக்கர் நிலத்தில் நெல், கோதுமை பயிர்களை பயிரிட்டு வருவதாக அவர் சொல்கிறார். 50 வயதுகளில் உள்ள ஹர்ஜீத் திருமணமாகாதவர். தனது தாயுடன் வசித்து வருகிறார்.
2017ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து அவரை நடக்க விடாமல் முடக்கிப் போட்டது. எனினும் அவர் தனது சக விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். “நான் என் வீட்டின் மேற்கூரையில் வேலை செய்துகொண்டிருந்தபோது வழுக்கி கீழே விழுந்துவிட்டேன்,” என்று விபத்து குறித்து அவர் சொல்கிறார். “என் இடுப்பு எலும்பு உடைந்தது.”





