கிராமத்தின் சந்துகளில் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கிறார் வைசாலி யேதே. சிரித்த முகத்தோடு கிராம மக்களை வணங்குகிறார். அவரை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். “ நான் உங்களின் மகள்” என்று உள்ளூர் இந்தியில் அவர் கைகூப்பி வாக்கு சேகரிக்கிறார்.
தன்னை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதில் அவருக்கு சந்தோஷம். “ கடவுள்கிட்ட நீங்க பிரார்த்தனை பண்ணும்போது எனக்காகவும் பிரார்த்திங்க. உங்க நினைப்புல என்னை எப்போதும் வச்சுக்கங்க” என்று அவர் வேண்டுகிறார். விவசாயக் குடும்பங்களில் இருக்கிற கணவரை இழந்த பெண்களை மறந்திடாதீங்க. கணவர்கள் இறந்தபிறகு அவங்க அனுபவிக்கிற மனக்கஷ்டங்களையும் பொருளாதார கஷ்டங்களையும் மறந்திடாதீங்க என்று மன்றாடுகிற வேண்டுகோள் அது.
வயதானவர்களைப் பார்த்தால், குனிந்து கால்களைத் தொட்டு மரியாதை செய்கிறார் இந்த 28 வயது வேட்பாளர். இளம் பெண்களின் கைகளைக் குலுக்கி பேசுகிறார். கைபம்புகளிலிருந்து தண்ணீர் கொண்டுவருகிற பெண்களைப் பார்த்து கை அசைக்கிறார். அவரோடு ஆறு,ஏழு வாகனங்கள் உள்ளன. காத்திருக்கிற காருக்குள் ஏறிக்கொள்கிறார். 42 டிகிரியில் கொளுத்துகிற வெயிலில் அடுத்த கிராமத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக பயணத்தைத் தொடர்கிறார்.
கிழக்கு மகாராஷ்ட்ரத்தில் உள்ள யாவத்மால் - வாசிம் நாடாளுமன்றத் தொகுதியில் 2019 தேர்தலில் போட்டியிடுகிறார் வைசாலி. ஏறத்தாழ 17.5 லட்சம் பேர் ஏப்ரல் 11 அன்று இங்கே வாக்களிக்கிறார்கள். பிரகார் ஜன்சக்தி பக்சா எனும் அரசியல் கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. ஓம்பிரகாஷ் (பக்சு) காடு என்பவர் அந்த கட்சியின் தலைவர். 48 வயதான அவர், அம்ராவதி மாவட்டத்தில் உள்ள அகல்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர். விதர்ப்பா பகுதியில் அவரது கட்சி வளர்ந்து வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துகிறது.


