விவசாயக் கூலியான சி.சுப்புலட்சுமி அவர்களுக்கு தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு என்பது அவர்களின் மனதில் கடைசி விஷயம். அவர் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் வாங்கிய ஆறு குடங்களை வைக்கக்கூடிய பிரத்யேக தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு சாலையைக் கடந்து சென்றார். அவரே அத்தனை குடம் தண்ணீரையும் சுமந்து செல்ல வேண்டியதால் அந்தப் பிரத்யேக தள்ளுவண்டியின் அவசியத்தை அது நமக்கு உணர்த்துகிறது. நாங்கள் பெரும் சிக்கலில் இருக்கிறோம் என்று குமாரரெட்டியாபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
சுப்புலட்சுமிக்கு, வாக்களிப்பதை தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்த நிறையக் காரணங்கள் உள்ளது. ஆனால் அவரது கிராமம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு தொகுதியாகும். திமுகவின் முன்னாள் தலைவரான மறைந்த, மு. கருணாநிதியின் மகள் கனிமொழியும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான தமிழிசை சவுந்திரராஜனும் போட்டியிடுகின்றனர். 2014 இல் நடந்த தேர்தலில் அஇஅதிமுகவைச் சேர்ந்த ஜெயசிங் தியாகராஜ் திமுகவின் ஜெகனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
13 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதி கவனத்தை ஈர்ப்பதற்கு இன்னொரு காரணம் கடந்த ஆண்டு தூத்துக்குடி நகரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குமாரரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களும் தான்.
பிப்ரவரி 12 2018 இந்த கிராமத்தில் இருந்து சுமார் 300 பேர் ஸ்டெர்லைட் ஆலையின் (வேதாந்தா நிறுவனம்) விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி நகர மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். இதுவே மார்ச் 24 2018 அன்று தூத்துக்குடி நகரில் 2 லட்சம் மக்களைஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஊக்கம் கொடுத்தது. வியப்பூட்டும் பன்முகத்தன்மையான பின்புலம் கொண்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் புதிய தாமிர உருக்கு ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதுள்ள ஸ்டெர்லைட் ஆலையே அவர்களது தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை நச்சாக மாற்றிவிட்டதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தையே அது அழித்து விட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.






