மனிதனின் பாலினத்தை க்ரோமோசோம்கள் எப்படி தீர்மானிக்கிறது என உயிரியல் ஆசிரியர் பாடம் நடத்துகையில் வகுப்பறையே அமைதியாகக் கவனிக்கிறது. “பெண்களுக்கு இரண்டு எக்ஸ் க்ரோமோசோம்களும் ஆண்களுக்கு ஒரு எக்ஸ் ஒரு ஒய் க்ரோமோசோமும் இருக்கின்றன. எக்ஸ் எக்ஸ் க்ரோமோசோம்கள் ஒய் க்ரோமோசோமுடன் சேர்கையில், அங்கு அமர்ந்திருப்பவர் போல ஒருவர் கிடைப்பார்,” என ஒரு மாணவரை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். மாணவர் சங்கடத்துடன் எழுந்து நிற்க வகுப்பறை சிரிப்பில் மூழ்குகிறது.
சண்டக்காரங்க நாடகத்தின் ஆரம்பக் காட்சி இது. சண்டக்காரங்க, திருநர் சமூகம் பற்றிய நாடகம். நாடகத்தின் முதல் பாதி, பாலினம் பணிக்கும் பங்கை அளிக்காத குழந்தைக்கு வகுப்பறையில் ஏற்படுத்தப்படும் கிண்டலும் அவமானமும் பற்றி பேசுகிறது. இரண்டாம் பகுதி, வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட திருநங்கையர் மற்றும் திருநம்பியர் வாழ்க்கைகளை மீட்டுருவாக்கியது.
ட்ரான்ஸ் ரைட்ஸ் நவ் கலக்டிவ் (TRNC) என்கிற திருநர் உரிமைகள் அமைப்பு, இந்தியாவின் தலித், பகுஜன் மற்றும் பழங்குடி சமூகங்களிலிருந்து வரும் திருநரின் குரல்களை நோக்கி இயங்குகிறது. சண்டக்காரங்க நாடகத்தின் முதல் அரங்கேற்றத்தை அவர்கள் சென்னையின் நவம்பர் 23, 2022 அன்று நிகழ்த்தினார்கள். ஒரு மணி நேர நாடகம் ஒன்பது பேர் கொண்ட திருநர் குழுவால் இயக்கி, தயாரித்து, நடிக்கப்படுகிறது.
“நவம்பர் 20ம் தேதி சர்வதேச திருநர் நினைவேந்தல் நாளாக இறந்து போன திருநர்களை நினைவுகூர அனுசரிக்கப்படுகிறது. குடும்பங்களால் ஒதுக்கப்பட்டு சமூகத்தால் விலக்கப்படும் அவர்களின் வாழ்க்கைகள் அத்தனை சுலபமானவை அல்ல. பலர் கொல்லப்படுகின்றனர். பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்,” என்கிறார் TRNC-ன் நிறுவனர் கிரேஸ் பானு.




























