பறை இசைத்து பேரணி தொடங்கப்பட்டது.
சுமார் 60 பேர் கொண்ட கூட்டம் “ஜெய் ஜெய் ஜெய் ஜெய் பீம், ஜெய் அம்பேத்கர், ஜெய் பீம்,” என்று முழக்கமிட்டது. மும்பை தாராவியில் ஒவ்வொரு வருடமும் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று நடத்தப்படும் மகாபரிநிர்வாண நிகழ்வு இது.
தாராவியின் பெரியார் சௌக்கில் கூடியிருந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றினர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இந்தக் குறிப்பிட்ட இடம் திடீரென கொண்டாட்டமும், உயிர்த்துடிப்பும் மிக்கதாக மாறியது. ‘மகாபரிநிர்வாண திவஸ்’ என்று அழைக்கப்படும் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வினை ஜெய்பீம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. பெரியார் ஈ.வெ.ராமசாமி சௌக்கில் இருந்து புறப்பட்டு, 1.5 கிலோமீட்டர் தூரம் பயணித்து கணேசன் கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்று சேரும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணி இரண்டு மணி நேரம் வரை நடக்கும்.
“இந்த நாள் எங்களுக்கு திருவிழா மாதிரி. அந்த மாபெரும் தலைவரையும், சாதிப் பாகுபாட்டுக்கு உள்ளான மக்களுக்காக அவர் ஆற்றியப் பணிகளையும் நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14 மற்றும் அவரது நினைவு நாளான டிசம்பர் 6 ஆகிய இரண்டு நாட்களையும் மொத்த மும்பை நகரமும் கொண்டாடும்,” என்கிறார் வெண்ணிலா சுரேஷ் குமார். கணவர் சுரேஷ் குமார் ராஜுவுடன் இணைந்து செயல்படும் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் அவர். “இந்தப் பேரணிப் பாதையை நீலக் கொடிகளால் அலங்கரித்ததோடு, வீடு வீடாகச் சென்று மக்களை நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தோம்.”
தாராவியில் உள்ள ஒரே ஒரு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார் வெண்ணிலா. தங்கள் தலைவரின் பணிகளைப் புகழ்ந்து தமிழில் பாடல் இசைத்துக்கொண்டிருந்த ஒரு குழுவோடு பின்னர் அவர் சேர்ந்துகொள்கிறார்.

















