இன்னும் அந்த நாள் ஞாபகம் இருக்கிறது. அம்மாவுக்கு அருகே போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொண்டு அவர் சொன்ன கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். “…பிறகு சித்தார்த்தன் வாழ்வின் உண்மையான அர்த்தத்தை தேடி வீட்டை விட்டு வெளியேறினான், “ என்றார். இரவு முழுக்க மழை பெய்தது. எங்களின் அறை பூமியின் மணத்தை கொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் கரும்புகை கூரையைத் தொட முயன்று கொண்டிருந்தது.
“சித்தார்த்தனுக்கு பசித்தால் என்ன செய்வான்?” என கேட்டேன். எத்தகைய முட்டாள் நான்? கடவுளுக்கு எப்படி பசிக்கும்?
பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அதே அறைக்கு சென்றேன். மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் கதவுகளிலிருந்து மழைநீர் சொட்டிக் கொண்டிருந்தது. எனக்கருகே போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அம்மா செய்தியை கவனித்துக் கொண்டிருந்தார். “21 நாள் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து நகரங்களை விட்டு சொந்த ஊர்களுக்கு ஐந்து லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றிருக்கின்றனர்.”
கேள்வி மட்டும் அப்படியே இருந்தது. அவர்களுக்கு பசித்தால் என்ன செய்வார்கள்?



