நெட்டிச் [Aeschynomene aspera L.] செடியின் தக்கையைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கிறேன். மென்மையான, இலகுவான இந்த தக்கையில் இருந்து பலவிதமான வடிவங்களை, உருவங்களை வெட்டியெடுக்க முடியும். இதை ஒடிஷாவில் ‘ஷோலாபித் காமா’ (தக்கை வேலைப்பாடு) என்று குறிப்பிடுகிறோம்.
ஒடிசி நடனக் கலைஞர்கள் மேடையில் ஆடும்போது தலையில் அணியும் தஹியா என்ற அணிகலனை இந்த தக்கையில் இருந்து செய்வேன். நெட்டி தக்கையில் இருந்து நெக்லேஸ், தசராவுக்கான பூவேலைப்பாடுகள் உள்ளிட்டவற்றை நான் செய்தபோதிலும், நான் செய்யும் தஹியா அணிகலன் மிகவும் பிரபலம்.
பிளாஸ்டிக்கில் கூட தஹியாக்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை அணிந்து ஆடும்போது நடனக் கலைஞர்களின் தலையில் உறுத்தும். இதனால், அவற்றை நீண்ட நேரம் அணிவது சிரமம். அதைப் போல பிளாஸ்டிக்கில் பலவிதமான வடிவங்களில் தஹியாக்களை செய்ய முடியாது.
தஹியா செய்யும் வேலையில் இருந்த பல கைவினைஞர்கள் அந்த வேலையை விட்டுவிட்டார்கள். ஆனால், எனக்கு நான் செய்யும் வேலை பிடித்திருக்கிறது.












