“போனமுறை நாங்க கபில் பட்டீலுக்கு வாக்களித்தோம். என்ன ஆச்சு? இன்னும்கூட இந்தக் கிராமத்தில ஆரம்ப சுகாதார நிலையம் கூட வரல. அப்பறம் இந்த ரோடுங்க. ஜெயிச்சபிறகு திரும்பி பாக்கக்கூட அவர் வரலே. அவருக்கு ஏன் மறுபடியும் ஓட்டு போடனும்? என்று கேட்கிறார் மாருதி விஷே.
38 டிகிரி வெயில் காலம். சாலைகள் கொதிக்கின்றன. மத்தியான வேளையில் டெம்ப்பரே கிராமமே வெறுமையாக இருக்கிறது. 70 வயதான விஷேயின் பக்காவான வீட்டின் முன் அறையில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் பாய்களிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த அறையின் ஒரு ஓரத்தில் அவரது ஐந்து ஏக்கர் நிலத்தில் விளைந்த அரிசி சாக்குப்பைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் குழுவில் அனைவரும் விவசாயிகளே. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு அல்லது ஐந்து ஏக்கர்கள் நிலம் இருக்கிறது. அதில் நெல்லும் பருவகாலங்களில் விளைகிற காய்கறிகளும் உள்ளன.“ நாங்கள் இந்தமுறை யாருக்கு ஓட்டுப் போடுவது என்று உட்கார்ந்து பேசவேண்டும்” என்கிறார் 60 வயதான ரகுநாத் போயிர்.
இந்த விவாதத்தை நடத்துவதால் எந்த பயனும் இருக்காது என்கிறார் 52 வயதான மகது போயிர்.“ நாம் பிஜேபிக்கு ஐந்து வருடங்கள் கொடுத்தோம். அவர்கள் அதை வீணாக்கிவிட்டார்கள். இப்போ காங்கிரசுக்கு மறுபடியும் ஐந்து வருடங்கள் தருவோம். அவர்களும் அவற்றை வீணாக்குவார்கள். இதில எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாருமே ஒரேமாதிரிதான்,” என்கிறார் அவர்.










