லடாக்கின் சுரு பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்கள் கோடை மாதங்களில் உயிர் கொள்கின்றன. பசுமையான நிலங்களில் ஓடைகள் கலகலத்து ஓடுகின்றன. பனி போர்த்திய மலைகளுக்கு நடுவே இருக்கும் அப்பகுதியை காட்டுப் பூக்கள் நிறைத்திருக்கிறது. பகல் வானம் அழகிய நீல நிறம் கொண்டிருக்கிறது. இரவு வானத்தில் பால்வெளியை நாம் காண முடியும்.
கார்கில் மாவட்டத்தின் இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் குழந்தைகள் சுற்றுச்சூழலுடன் உணர்வுப்பூர்வமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். 2021ம் ஆண்டில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட டாய் சுரு கிராமத்தில் பெண் குழந்தைகள் பாறைகளில் ஏறுவார்கள். கோடையில் பூக்கள் சேகரிப்பார்கள். குளிர்காலத்தில் பனியை சேகரிப்பார்கள். ஓடைகளில் குதித்து விளையாடுவார்கள். வாற் கோதுமை வயல்களில் விளையாடுவதுதான் அவர்களுக்கு பிடித்த கோடைகாலப் பொழுதுபோக்கு.
லடாக் யூனியன் பிரதேசத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமான லெவிலிருந்து கார்கில் தூரத்தில் இருக்கிறது. லடாக்கின் இரு மாவட்டங்களில் அதுவும் ஒன்று.
கார்கிலை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியாக பிற இடத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். அது அப்படி இல்லை. சுன்னி இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் பகுதி போலன்றி, கார்கிலில் பெரும்பான்மையாக வசிப்பது ஷியா இஸ்லாமியர்தான்.
சுரு பள்ளத்தாக்கில் இருக்கும் ஷியா இஸ்லாமியர்கள், 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கார்கில் டவுனை முக்கியமான புனிதத் தளமாகக் கருதுகின்றனர். அங்கிருக்கும் மக்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான முகர்ரம் முக்கியமான காலக்கட்டம் ஆகும். நபிகள் நாயகத்தின் பேரரான இமாம் ஹுசைனுக்கு தீவிரமாக துக்கம் அனுசரிக்கப்படும். கிபி 680ம் ஆண்டின் அக்டோபர் 10ம் தேதி கர்பாலாவில் (தற்போதைய ஈராக்) நடந்தப் போரில் 72 பேருடன் அவர் கொல்லப்பட்டார்.
அந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் முகர்ரமில் நடக்கும் சடங்குகளில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வர். ஜுலூஸ் அல்லது தஸ்தா என அழைக்கப்படும் ஊர்வலங்கள் பல நாட்களில் நடக்கும். இதில் பெரிய அளவுக்கான ஊர்வலம் முகர்ரத்தின் பத்தாம் நாளான அஷுரா அன்று நடக்கும். ஹுசைனும் பிறரும் கர்பாலாவில் கொல்லப்பட்ட நாள் அது. சில ஆண்கள் தங்களைத் தாங்களே சங்கிலிகள் கொண்டும் கத்திகள் கொண்டும் அடித்துக் கொள்ளும் (காமா ஜாணி) சடங்கைச் செய்வார்கள். அனைவரும் தங்களின் நெஞ்சில் அடித்துக் கொள்வார்கள் (சீனா ஜாணி).


























