“என் முதுகு வெப்பத்தால் எரிகிறது” என்கிறார் கஜூவாஸ் கிராமத்திற்கு வெளியே உள்ள வன்னி மரக் கிளை நிழலில் தரையில் அமர்ந்திருக்கும் பஜ்ரங் கோஸ்வாமி. “வெப்பம் அதிகரித்தால், சாகுபடி குறைந்துவிடும்“ என்று அறுவடை செய்யப்பட்ட கம்பைப் பார்த்தபடி சொல்கிறார். அருகில் ஒட்டகம் ஒன்று 14 ஏக்கர் நிலத்தில் உலர் புல்லை மென்று கொண்டிருந்தது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் தாராநகர் தாலுக்காவில் உள்ள நிலத்தில் அவரும், அவரது மனைவி ராஜ் கவுரும் இணைந்து சாகுபடி செய்கின்றனர்.
“தலையில் வெப்பம் சுட்டெரிக்கிறது, காலும் வெப்பத்தில் பழுக்கிறது” என்கிறார் தெற்கு தாராநகரில் உள்ள சுஜாங்கர் தாலுக்காவைச் சேர்ந்த கீதா தேவி நாயக். நிலமற்ற விதவையான கீதா தேவி பக்வானி தேவி சவுத்ரி குடும்பத்திற்கு சொந்தமான விளைநிலத்தில் கூலி வேலை செய்கிறார். பக்வானி தேவியும், கீதா தேவியும் குதாவாரி கிராமத்தில் மாலை 5 மணிக்கு பணியை முடித்தனர். “இப்போதெல்லாம் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது“ என்கிறார் பக்வானி தேவி.
வடக்கு ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் கோடைக் காலத்தில் மணல் சுடுகிறது. மே, ஜூன் மாதங்களில் ஓர் உலையைப் போல காற்று கொதிக்கிறது. வெப்பத்தின் தாக்கம் குறித்த பேச்சு இப்போது பரவலாக இருக்கிறது. இம்மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி வரை செல்கிறது. கடந்த மாதம் மே 26ஆம் தேதி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. இது தான் உலகின் அதிகமான வெப்பநிலை என்கின்றன செய்தி அறிக்கைகள்.
சுருவில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இது நீரை கொதிக்க வைப்பதற்கான வெப்பத்தில் பாதிக்கும் மேற்பட்ட அளவாகும். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே வெப்பநிலை 50 டிகிரியை எட்டியது என் நினைவில் இருக்கிறது” என்கிறார் கஜூவாஸ் கிராமத்தில் உள்ள தனது பெரிய வீட்டின் கட்டிலில் அமர்ந்தபடி பேசும் ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியரும், நில உரிமையாளருமான 75 வயதாகும் ஹர்தயால்ஜி சிங்.


















