தெய்வம் எந்த நிமிடமும் பூமிக்கு வரலாம். அவருக்கு உடை மாற்ற முதலில் அவகாசம் கொடுக்க வேண்டும். “ஏற்கனவே ஏழு மணி ஆகிவிட்டது. ரஜத் ஜூபிலி கிராமத்து மக்களே, படுக்கைகளையும் துணிகளையும் புடவைகளையும் தயவுசெய்து கொண்டு வாருங்கள். நாம் ஒரு உடை மாற்றும் அறையை உருவாக்க வேண்டும். கடவுளின் பூமி வருகை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.” இசை நிகழ்ச்சிக்குக்கு முந்தைய அறிவிப்புகள் காற்றில் எதிரொலித்து கிராமத்தின் தெருக்களில் பரவின. இரவு நிச்சயம் விழாக்கோலம் பூணவிருக்கிறது.
ஒரு மணி நேரத்தில், உடை மாற்றும் அறை ஒன்று தயாரானது. கலைஞர்கள் பளீர் உடைகளில் ஒப்பனை போட்டு, அணிகலன்கள் அணிந்து கொண்டு எழுதப்படாத திரைக்கதையின் வசனங்களை ஒப்பித்து பார்த்துக் கொண்டனர். குழுவின் தலைவரான நித்தியானந்தா சர்கார் சோகமான பாவனையைக் கொண்டிருந்தார். ஹிரான்மாய் மற்றும் பிரியங்கா திருமணத்தில் அவரை துடிப்புமிக்க நடனக்கலைஞராக நான் சந்தித்திருக்கிறேன். இன்று அவர் பாம்புப் பெண் தெய்வமான மனசாவாக நடிக்கவிருக்கிறார். மாலையில் நடக்கவிருக்கும் நாடகத்தில் பங்குபெறவிருக்கும் பிற கலைஞர்களை எனக்கு அறிமுகப்படுத்துகிறார்.
மங்கள் காவ்யா என்கிற வகையில் ஒரு புகழ் வாய்ந்த பெண் கடவுளையோ தெய்வத்தையோ புகழ்ந்து பாடும் இசை நாடகமே பலகான நாடகம். இத்தகைய கதைப்பாடல்கள் வழக்கமாக இந்தியா முழுமைக்கும் கடவுளாக இருக்கும் சிவனின் புகழ் பாடுவதாக இருக்கும். உள்ளூர் தெய்வங்களான தர்மா தாகூர், பாம்பு தெய்வம் மா மனசா, அம்மை நோய்த் தெய்வமான ஷிதாலா, காட்டுதெய்வமான போன் பிபி முதலிய தெய்வங்களைப் பற்றியும் பாடப்படுகிறது. பல தரப்பு மக்களுக்காக இந்த இசை நாடகங்களை நிகழ்த்த, கலைஞர்களின் குழுக்கள் சுந்தரவனங்களின் பல பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் பயணிக்கின்றன.
மேற்கு வங்கம், அசாம், பிகார் முதலிய மாநிலங்களில் நிகழ்த்தப்படும் மனசா பல கான இசை நாடகம், மனசா மங்கள காவ்யா என்கிற முக்கியமான கதைப்பாடலை அடிப்படையாகக் கொண்டது. அந்த கதைப்பாடலின் காலம் 13ம் நூற்றாண்டு எனக் குறிக்கிறது ஓர் ஆய்வு. பல நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பாடல் அது. வங்கத்தின் பல மாவட்டங்களில் வசிக்கும் தலித்களின் கடவுளாக மனசா பெண் தெய்வம் வணங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தின் விஸ்வகர்மா பூஜையின்போதும் (இந்த வருடம் செப்டம்பர் 17), சுந்தரவனத்தின் பல கிராமங்களை சேர்ந்த குடும்பங்கள் பாம்பு தெய்வத்தை வணங்கி பல கான நாடகத்தை நடத்துகின்றனர்.

























