மதுரா நிற்குடே சிரித்துக் கொண்டே உரத்த குரலில், "அவர்கள் எங்களுக்கு எதுவுமே கற்பிக்கவில்லை", என்கிறார். நாசிக் மாவட்டத்தில் திரிம்பகேஸ்வரர் தாலுகாவில் உள்ள டேக் ஹர்ஷா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் நின்ற மாட்டுவண்டியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். கிராமத்தில் இருந்த சுமார் 1500 குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் தக்கர் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் வரை, 11 வயதாகும் மதுரா எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தகலேவாடி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் மாநில அரசாங்கம் அப்பள்ளியின் மூடிவிட்டது. டேக் ஹர்ஷாவிலிருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஔஹாதே கிராமத்தில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பால் நடத்தப்படும் பள்ளியில் இப்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
எந்தப் பள்ளியை விரும்புகிறார் என்று கேட்டால் உடனடியாக சொல்கிறார்: "முதல் பள்ளி".
தகலேவாடி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மூடப்பட்ட போது ஔஹாதேயில் உள்ள பள்ளி இப்பள்ளியில் இருந்த 14 மாணவர்களை அழைத்துச் சென்றது என்று அதே தாலுகாவிலுள்ள வாவி ஹர்ஷா கிராமத்தைச் சேர்ந்த கல்வி ஆர்வலரான பகவான் மாதே கூறுகிறார். "இது மாநில அரசிடமிருந்து எந்த மானியத்தையும் பெறவில்லை அதனால் அவர்கள் அதை தீவிரமாக இயக்கவில்லை", என்று அவர் மேலும் கூறுகிறார். ஔஹாதேயில் உள்ள பள்ளியில் - ஸ்ரீ கஜனன் மகாராஜா வித்யாலயா - வாரத்திற்கு இரண்டு முறை தான் வகுப்புகள் நடைபெறுகிறது.
ஆனால் மதுரா தகலேவாடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை இழந்தது ஒன்றும் விதிவிலக்கல்ல. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் பள்ளிகள் மூடப்படுவதை கண்டிருக்கிறார்கள்.







