ஷீதல் வேக்மேர் தொலைபேசி மணி அடித்தாலே அஞ்சுகிறார். அவர் தவிர்க்க விரும்பும் வங்கி ஏஜண்ட்டின் எண் அல்லாத வேறெந்த எண்ணாக இருந்தாலும் நிம்மதி அடைகிறார். “அவர்கள் கொரோனா வைரஸ்ஸை பொருட்படுத்துவதில்லை,” என்கிறார் 31 வயதான ஷீதல். நல்லவேளையாக ஒரு வாரத்துக்கு முன் தொலைபேசி அழைப்புகள் குறைந்தன. ஏனென்ற காரணம் ஷீதலுக்கு தெரியவில்லை. ஆனாலும் “அவர்கள் திரும்பத் தொடங்குவார்கள்…” என்கிறார் அவர்.
வேக்மேரின் குடும்ப உறுப்பினர்கள் தினக்கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். மகாராஷ்டிராவின் வேளாண் பகுதியான மராத்வாடாவில் உள்ள ஒஸ்மனாபாத்தில் வசிக்கிறார்கள். 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில், ஜெயலக்ஷ்மி நிதி நிறுவனம் என்கிற நிறுவனத்திலிருந்து ஷீதலின் தாய் மங்கள், 60,000 ரூபாய் கடன் வாங்கினார். “நாங்கள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்கினோம். நான் ரவிக்கைகள் தைக்கத் தொடங்கினேன். எம்பிராய்டரி என்கிற பூத்தையல் போன்ற பல தையல் வேலைகளை செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் 53 வயதான மங்கள். “என் கணவரும் மகனும் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். எங்களுக்கென சொந்தமாக நிலமில்லை.”
24 சதவிகித வட்டிக் கடனுக்கான தவணைத் தொகை ரூ.3230-ஐ ஒரு மாதம் கூட வேக்மேர் குடும்பம் தவற விட்டதில்லை. “ஆனால் ஊரடங்கு தொடங்கிய பின் எங்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை,” என்கிறார் ஷீதல். “எங்களை சுற்றி இருக்கும் எவரிடமும் பணமில்லை. எல்லோரின் வாங்கும் சக்தியும் ஊரடங்கினால் குறைந்து போனது (மகாராஷ்டிராவில் ஊரடங்கு மார்ச் 23ம் தேதி தொடங்கியது). எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. துணி தைக்கக் கொடுக்கும் அளவுக்கான பணமும் யாரிடமும் இல்லை.”
ஆனாலும் இது எதுவும் கடன் வாங்கியவர்களை சிறுநிதி நிறுவனம் தொலைபேசியில் அழைப்பதிலிருந்து நிறுத்தவில்லை. “என்ன ஆனாலும் பரவாயில்லை, காசை கட்டுங்கள் என்கிறார்கள்,” எனச் சொல்கிறார் ஷீதல். “என்ன வேண்டுமானாலும் செய்து, மாதக் கடைசியில் பணத்தை கட்டுங்கள் என்கிறார்கள்.”





