“ஊரடங்கு எங்களை பாழாக்கி விட்டது. கடைசியாக மார்ச் மாதத்தில் என் கடைக்கு சுற்றுலாவாசி ஒருவர் வந்ததாக” கூறுகிறார் அப்துல் மஜித் பட்.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் மூன்று கடைகளை நடத்தி வரும் பட், தோல் பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவிவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஆனால் ஜூன் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும், ஒரு வாடிக்கையாளர் கூட அவர் கடைக்கு வரவில்லை. ஆகஸ்ட் 5, 2019 அன்று காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து தொடங்கிய மோசமான காலம், தற்போது ஒரு வருடம் ஆகியும் இன்னும் ஒய்ந்தபாடில்லை.
பட் போன்ற பலருக்கு வருமானம் அளித்து வந்த சுற்றுலா, இந்த இரண்டின் தாக்கத்தால் நசுங்கிவிட்டது.
‘6-7 மாத முடக்கத்திற்குப் பிறகு சுற்றுலா சீஸன் தொடங்கியது. அதற்குள் கொரோனா ஊரடங்கு ஆரம்பமானது” என்கிறார் 62 வயதான பட். தால் ஏரியின் பதபோரா காலன் பகுதியைச் சேர்ந்த இவர், எல்லாரும் மதிக்கக்கூடிய பெரியவர். இவர் ஏரிக்கரை சுற்றுலா வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்த சங்கத்தில் 70 உறுப்பினர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவர் கூறியதையே ஏரியின் சுற்றுலா பொருளாதாரத்தை சார்ந்திருக்கும் பலரும் – மஞ்சள் நிற படகு வீட்டை வைத்திருக்கும் ஷிகர்வாலாக்கள், வணிகர்கள் மற்றும் கடை முதலாளிகள் - எதிரொலிக்கின்றனர். கடந்த 12 மாதங்களாக சுற்றுலா பிரசுரத்தில் உள்ள அழகிய தால் ஏரியின் புகைப்படத்தை மட்டுமே இவர்கள் பார்த்து வருகிறார்கள். (பார்க்க ஸ்ரீநகரின் ஷிகராக்கள்: அசைவற்ற நீர் கடுமையான இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது)
அவர்களில் ஒருவர்தான் நேரு பூங்காவைச் சேர்ந்த 27 வயது ஹஃப்ஸா பட். ஜம்மு காஷ்மீர் தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் 24 நாள் பயிற்சி முடித்து, ஊரடங்கு தொடங்குவதற்கு முன்புதான், வீட்டிலிருந்து சிறு தொழில் தொடங்கியிருந்தார் ஹஃப்ஸா. ஸ்ரீநகரில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவர், நிறுவனத்திடமிருந்து குறைந்த வட்டியில் ரூ. 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். “துணிகளையும் உடைகளையும் நிறைய வாங்கி வைத்துள்ளேன். அதில் 10-20 சதவிகிதமே விற்பனை செய்திருந்தேன். அதற்குள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது தவணைத் தொகை கட்டுவதற்கு சிரமப்பட்டு வருகிறேன்” என அவர் கூறுகிறார்.











