அந்த மரத்தை அவரது தாத்தாதான் நட்டு வளர்த்திருக்கிறார். அந்த மரத்திற்கு என்னை விட வயது அதிகம் என்கிறார் மகாதேவ் காம்ளே. அந்த மரத்தின் நிழலில் அவர் அமர்ந்திருக்கிறார். ஒரு காலத்தில் இரண்டு ஏக்கர் மாந்தோப்பாக இருந்த இடம் அது. வறண்டு கிடக்கிற இந்த இடத்தில் இப்போது ஒரு மரம்தான் மீதம் இருக்கிறது.
அந்த தனிமரம் தான் காம்ப்ளேயும் பரஞ்ச் மோகசா கிராமத்தின் மற்றவர்களும் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிருக்கு எதிராக ஏப்ரல் 11 அன்று ஏன் வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை நமக்கு கூறுகிறது. கிழக்கு மகாராஷ்டிராவில், சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அவர். நான்கு முறை தொடர்ந்து அந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். பாரதிய ஜனதா தலைமை தாங்குகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் அவர் பதவியில் இருக்கிறார்.
கடந்த பத்தாண்டில் இந்தப் பகுதிக்கு வந்த திட்டங்களில் நிலக்கரி சுரங்கத்துக்கான திட்டத்துக்காக, காம்ப்ளேவின் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டபோது, மாந்தோப்பில் இருந்த மற்ற எல்லா மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன
2011 ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பராஞ் மோகசா அதில் இருந்தது. அந்தக் கிராமத்தின் அனைத்து நிலங்களையும் அனைத்து சொத்துக்களையும் அனைத்து வாழ்வாதாரங்களையும் நிலக்கரி சுரங்கத்துக்கான திட்டம் தற்போது எடுத்துக் கொண்டு விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தவிக்கிற நிலைக்கு கிராமத்தின் 1800 குடும்பங்களையும் இந்தத் திட்டம் தள்ளிவிட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டாலும் அதில் வசித்த மக்களுக்கு இன்னமும் மறுவாழ்வு பணிகள் எதுவும் செய்யப்படவில்லை.











