சமூக இயக்கமாக சைக்கிள் பயணமா? கொஞ்சம் மிகைப்படுத்துவதாகத் தோன்றுகிறதா? இருக்கலாம். ஆனால் மிகையில்லை. தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் முதல் தலைமுறைக் கல்வி கற்ற பல ஆயிரம் பெண்களுக்கு இது புதிய விஷயமாக இல்லை. தங்களது பின்தங்கிய நிலைக்கு எதிராக, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த, தங்களைப் பிணைத்திருக்கும் தளைகளிலிருந்து விடுபட மக்கள் வழிகளைத் தேடி கண்டடைகிறார்கள்.
இதில், இந்தியாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றில், கிராமப்புற பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதை தங்களின் வழியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடந்த 18 மாதங்களாக, 100,000-க்கும் அதிகமான கிராமப்புற பெண்கள் - பெரும்பாலானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் - சுதந்திரத்தின், விடுதலையின், இயங்குதலின் சின்னமாக சைக்கிள் ஓட்டுவதை நினைக்கிறார்கள். 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளை மட்டும் விடுத்துப்பார்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கும் நான்கில் ஒரு பகுதிப் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டவர்கள். 70,000-க்கும் அதிகமான பெண்கள் பொது ‘பொருட்காட்சி-போட்டிகளில்’ கலந்துகொண்டு பெருமையுடன் தங்களின் புதிய திறன்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும், பயிற்சி முகாம்களும் கற்றுக்கொள்வதற்கான விருப்பமும் தொடர்கிறது.
புதுக்கோட்டை கிராமப்புறப்பகுதியின் மையத்தில், மிகவும் பின்தங்கிய பழமைவாதம் நிரம்பிய குடும்பப்பின்னணி கொண்ட இஸ்லாமியப் பெண்கள் சாலைகளில் சைக்கிள் மிதித்துச் செல்கிறார்கள். சைக்கிளில் பயணிக்கும் சிலர் முகத்தின் மறைத்து அணியும் துணியையும் கூட அணிவதில்லை. சைக்கிளில் பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இளம் இஸ்லாமியப் பெண்ணான ஜமீலா பீபி, “இது என்னுடைய உரிமை. நாங்கள் எங்கும் செல்லலாம். நான் இப்போது பேருந்துக்காக காத்திருக்கத் தேவையில்லை. முதலில் நான் சைக்கிள் ஓட்டத் தொடங்கியபோது பலர் தகாத முறையில் என்னைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் நான் அதில் கவனம் செலுத்தவில்லை’’ என்கிறார்.
ஃபாத்திமா ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியை. ஒவ்வொரு நாள் மாலையிலும் அரைமணி நேரத்துக்கு மிதிவண்டியை வாடகைக்கு வாங்கி ஓட்டுவதை தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். (அவருக்கு ஒரு மிதிவண்டி வாங்குவதற்கான பொருளாதார வசதியில்லை – ஒரு மிதிவண்டிக்கு 1200 ரூபாய்க்கும் அதிகமான பணம் தேவை) “சைக்கிள் ஓட்டுவதில் ஒரு விடுதலை இருக்கிறது. இப்போது நாங்கள் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. இதை என்னால் விடமுடியாது’’ என்கிறார்கள் ஜமீலா, ஃபாத்திமா மற்றும் அவர்களின் தோழியான அவகன்னி. 20 வயதுகளில் இருக்கும் இந்தப் பெண்கள் அந்த பகுதியில் இருக்கும் இன்னும் நிறைய இளம்பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சியளிக்கிறார்கள்.





