குலாபும், ஷாசதும் தங்களின் சிறப்பான மந்திர காட்சிகளை தொடங்கும் முன் உரக்க கத்துகின்றனர், “ஹூருக் போம் போம் கேலா!” இது “அப்ராகாடப்ரா” என்பது போல வங்காள சொற்றொடர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 80-90 பார்வையாளர்களை திரட்டவும் இது உதவுகிறது. இரு சகோதரர்களில் மூத்தவரான குலாப் பார்வையாளர்களில் ஒருவரான மிண்டு ஹல்தரை உதவிக்கு அழைக்கிறார். மிண்டு துணிச்சலுடன் முன்வருகிறார். மாயாஜால தந்திரங்கள் தொடங்குகின்றன.
இளைய சகோதரர் ஷசாத்தை மறைய வைப்பதாக குலாப் வாக்களிக்கிறார். மந்திரத்தால் மறையப் போகும் சகோதரர் பெரிய வலைக்குள் அமர்கிறார். மிண்டு அந்த வலையைக் கொண்டு ஷசாதின் தலை வரைக்கும் கட்டுகிறார். இருபுறமும் திறக்கும் பெட்டியை ஷசாத் மீது குலாப் வைத்து போர்வை கொண்டு போர்த்துகிறார். என்ன நடக்குமோ என்ற ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.
இப்போது விலங்கின் எலும்பை ஆட்டி மந்திரம் சொல்லி மந்திர சக்திகளிடம் வேண்டி சகோதரனை மறையச் செய்கிறார்: “அர்கத் கோப்டி மர்கத் மசன், பச்சா கே லேஜா தேலியா மசனான்.” பிறகு அவர் பெட்டியின் ஒவ்வொரு முனையிலும் ஷசாத் இருக்கிறாரா என மிண்டுவிடம் கேட்கிறார். மிண்டுவும் அப்படி தேடும்போது பெட்டி காலியாக இருக்கிறது. ஷசாதை எங்கும் காணவில்லை.
“உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்: இச்சிறுவனுக்கு இது கஷ்டமான நேரமா? என்னிடம் எல்லோரும் சொல்லுங்கள்: அவன் இருக்கிறானா, இல்லையா?” குலாப் கேட்கிறார். இப்போது மறைந்திருக்கும் ஷசாத் கஷ்டத்தில் தான் இருக்க வேண்டும் என கூட்டத்தில் உள்ளவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.



