“எல்லா ஆன்மாக்களும் மரணமடையும்” என்கிறது ஒரு கல்லறைப் பதிவு. எதிர்காலத்தை கணிப்பதில் புதுதில்லியின் பெரிய இடுகாடான கப்ரிஸ்தானின் ஜதீத் அல் இ இஸ்லாம் கல்லறைகள் அளவுக்கு துல்லியம் வேறில் இல்லை.
- كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ - என குரானில் வரும் ஒரு வசனத்தின் வரி இஸ்லாமிய இடுகாட்டுக்கே உரிய வாட்டத்துடன் அமைதியையும் துயரத்தையும் கூட்டுகிறது. ஒரு அவசர ஊர்தி இன்னொரு இறப்படுன உள்ளே வருகிறது. இறந்தவரின் உறவுகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். அவசர ஊர்தி காலியாகி ஒரு சவக்குழி நிரம்பியது. பிறகு ஒரு இயந்திரம் குழிக்குள் மண்ணை கொட்டியது
இடுகாட்டின் ஒரு மூலையில் அமர்ந்து 62 வயது நிசாம் அக்தர் இறந்து போனவர்களின் பெயர்களை கல்லறைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். சித்திர எழுத்துக்கான தூரிகையை லாவகமாக விரல்களுக்கு இடையில் பிடித்துக் கொண்டு உருது எழுத்துகள் சிலவற்றில் புள்ளி வரைந்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிக் கொண்டிருந்த பெயர், ‘துர்தனா’. கோவிட்19 தொற்றால் இறந்துபோனவர்.
பெயர்களை வண்ணத்தில் வரைந்து அவற்றுக்கான எழுத்துகளை சித்திர எழுத்து முறை கொண்டு நிசாம் கல்லறைகளில் வரைந்து கொண்டிருக்கிறார். சற்று நேரத்துக்கு பிறகு உடன் பணிபுரியும் ஒருவர், சுத்தியல் மற்றும் உளியை கொண்டு அந்த எழுத்துகளை அப்படியே கல்லறையில் செதுக்குவார். அவர் செதுக்கும்போது வண்ணம் மறைந்துவிடும்.
சித்திர எழுத்துக் கலைஞராக இருக்கும் நிசாம் இறந்தவர்களின் பெயர்களை கல்லறையில் எழுதும் வேலையை 40 வருடங்களாக செய்து வருகிறார். “எத்தனை கல்லறைகளில் எழுதினேன் என எண்ணிக்கை ஞாபகமில்லை,” என்கிறார் அவர். “இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 150 பேரின் பெயர்களை எழுதி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் கோவிட் தொற்றால் இறந்தவர்கள். அதே அளவில் கோவிட் பாதிப்பு ஏற்படாமலும் இறந்திருக்கிறார்கள்.அவர்களும் எழுதியிருக்கிறேன். ஒருநாளில் மூன்றிலிருந்து ஐந்து கல்லறைகள் வரை முடிப்பேன். கல்லறையின் பெயரிருக்கும் கல்லின் ஒரு பக்கத்தில் எழுத சுமாராக ஒரு மணி நேரம் ஆகும்,” என்கிறார் அவர். அதாவது உருது மொழியில் எழுத அந்த கால அளவு. கல்லின் மறுபக்கத்தில் இறந்தவரின் பெயர் மட்டுமே இடம்பெறும். அதுவும் ஆங்கிலத்தில்தான். “சில நொடிகளில் ஒரு பக்கத்தை நிரப்புவது போலல்ல,” என புன்னகைக்கிறார் நான் எடுக்கும் குறிப்புகளை சுட்டிக்காட்டி.













