சானியா முல்லானியைப் பொறுத்தவரை மழைப்பருவத்தின் முதல் மழை, அவர் பிறந்தநாள் பற்றிய ஆரூடத்த்தின் நினைவு ஆகும்.
ஜூலை 2005-ல் அவர் பிறந்தார். ஒரு வாரத்துக்கு முன்தான் கடும் வெள்ளம் நேர்ந்து 1,000 உயிர்களை பலி கொண்டிருந்தது. மகாராஷ்டிராவில் 2 கோடி மக்களை பாதித்திருந்தது. “வெள்ள காலத்தில் பிறந்தவள் அவள்; வெள்ளத்தில்தான் அவளின் பெரும்பான்மையான காலம் கழியும்,” என அவரது பெற்றோரிடம் மக்கள் சொல்லியிருக்கின்றனர்.
ஜுலை 2022-ன் முதல் வாரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியதும் 17 வயது சானியா அதை மீண்டும் நினைவுகூர்ந்தார். “நீர் மட்டம் உயருகிறது என எப்போது சொல்லப்பட்டாலும் வெள்ளம் வந்து விடுமோ என்கிற பயம் எனக்குள் ஏற்பட்டுவிடும்,” என்கிறார் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் ஹத்கனங்க்ளே தாலுகாவிலுள்ள பெந்தாவடேவில் வசிக்கும் அவர். கிராமத்தின் 4,986 பேரும் இரண்டு கடும் வெள்ளங்களை 2019ம் ஆண்டிலிருந்து பார்த்திருக்கின்றனர்.
“ஆகஸ்ட் 2019 வெள்ளங்களின்போது, எங்கள் வீட்டில் வெறும் 24 மணி நேரங்களில் ஏழடிக்கு நீர் உயர்ந்தது,” என நினைவுகூருகிறார் சானியா. வீட்டுக்குள் நீர் புகத் தொடங்கிய சமயத்தில் முல்லானி குடும்பம் தப்பித்துவிட்டது. எனினும் அச்சம்பவம் சானியாவுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளங்கள் மீண்டும் கிராமத்தை ஜூலை 2021-ல் தாக்கியது. இம்முறை, கிராமத்தின் வெளியே இருந்த ஒரு நிவாரண முகாமுக்கு குடும்பம் நகர்ந்தது. மூன்று வாரங்கள் கழித்து பிரச்சினை ஒன்றுமில்லை என கிராம அலுவலர்கள் சொன்ன பிறகுதான் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
டேக்வொண்டோ தற்காப்புக் கலையின் சாம்பியனான சானியா, அடுத்தக் கட்டமான ‘ப்ளாக் பெல்ட்’ பெறுவதற்கான பயிற்சி 2019ம் ஆண்டின் வெள்ளம் தொடங்கி தடைபட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக சோர்வு, ஆதங்கம், எரிச்சல், பதற்றம் முதலிய உணர்வு நிலைகளால் அவர் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார். “என் பயிற்சியில் நான் கவனம் செலுத்த முடியவில்லை,” என்கிறார் அவர். “என் பயிற்சி, மழையைச் சார்ந்ததாக இருக்கிறது.”





















