ஒருவரை மட்டும் கொரொனா வைரஸ் பாதித்திருந்தது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. கிராமவாசிகளுடன் கூடிப் பேசி ஊர் தலையாரி ஓர் உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்கு அந்த குடும்பம் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. கொரோனாவுக்கான தனிமை சிகிச்சை என்னவோ வெறும் 14 நாட்கள்தான். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் பாதிப்பு இருந்தது.
இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. ஒஸ்மனாபாத் மாவட்டத்திலேயே அவருக்குதான் முதல் பாதிப்பு. பிரச்சினை என்னவென்றால், தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பியிருந்தார்.
ஒஸ்மனாபாத்தின் உமர்கா தாலுகாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அவரின் குடும்பம் அறிவிக்கப்படாத வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தது. “எங்களின் நிலத்துக்கு சென்று அறுவடை கூட செய்ய முடியவில்லை,” என்கிறார் 31 வயதாகும் முகமது சல்மான் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). “பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. நாங்கள் செல்ல முடியாததால் அழிந்து கொண்டிருக்கின்றன. கால்நடை கொஞ்ச பயிரை அழித்துவிட்டது. மிச்சம் இருந்தவை காய்ந்துவிட்டது. எங்களால் அவற்றை காக்க முடியவில்லை. கிட்டத்தட்ட்ட 50,000 ரூபாய் நஷ்டம்.”
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த மார்ச் 24ம் தேதிதான் சல்மான் ஊர் திரும்பினார். அதே வாரத்தில், கிட்டத்தட்ட 2000 பேர் தப்லிகி ஜமாத்தின் தலைமையிடமான மர்க்காஸ் நிசாமுத்தின்னில் தங்கியிருந்த விஷயத்தை தில்லி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தப்லிகி ஜமாத் என்பது1926ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தில்லியில் இயங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் இஸ்லாமிய அமைப்பாகும். மார்ச் 13லிருந்து 15 வரை அவர்கள் தில்லியில் நடந்த மாநாட்டுக்காக கூடினர். அந்த மாநாடு வைரஸ் பரவுவதற்கான முக்கியமான இடமாக மாறிப் போனது. அந்த நிகழ்வுக்கு பிறகு மிக மோசமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீதும் பழி போடும் வேலை தொடங்கியது.








