கடந்தாண்டு ஷஷ்டி புனியா பள்ளியைவிட்டு நின்றுவிட்டார். பின்னர் அவர் சித்தாராம்பூரில் இருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருக்கு ரயிலில் சென்றார். சுந்தர்பன்ஸ் பகுதியில் அவரது கிராமம் உள்ளது. “நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். நான் பள்ளியில் மதிய உணவு உண்ண முடியாது“ என்று அவர் கூறுகிறார். ஷஷ்டிக்கு வயது 16. 9ம் வகுப்பு படிக்கிறார். மேற்கு வங்கத்திலும், இந்தியாவிலும், அரசுப்பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை மட்டும்தான் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்தாண்டு மார்ச் மாதத்தில், ஷஷ்டி தனது கிராமத்திற்கு திரும்பி வந்துவிட்டார். தெற்கு 24 பாரகனாஸ் மாவட்டத்தில் உள்ள காக்கத்வீப் வட்டத்தில் அவரது கிராமம் உள்ளது. ஊரடங்கு துவங்கியதால் அவர் தனது கிராமத்திற்கு வந்துவிட்டார். பெங்களூரில் அவர் வீட்டு வேலைகள் செய்கிறார். அவருக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் பணத்தை அவர் வீட்டிற்கு மாதந்தோறும் அனுப்ப வேண்டும். அதுவும் நின்றுவிட்டது.
ஷஷ்டியின் 44 வயதான தந்தை தனஞ்ஜாய் புனியா, சித்தாராம்புர் கடற்கரை பகுதியில் உள்ள நயாச்சார் தீவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவர் வெறுங்கையாலே மீன்கள் மற்றும் நண்டுகள் பிடிப்பார். சில சமயம் சிறிய வலைகளில் மீன் பிடிப்பார். அருகில் உள்ள சந்தையில் அவற்றை விற்பார். 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார்.
அவர்களின் மண் குடிசையில், தனஞ்ஜாயின் தாய் மஹாராணி, அவரது மகள்கள் ஜன்ஜாலி (21), ஷஷ்டி (18), மகன் சுப்ரத்தா (14) ஆகியோர் வசித்து வருகின்றனர். சுப்ரத்தா பிறந்த சில மாதங்கள் கழித்து அவரது மனைவி இறந்துவிட்டார். “தீவில் முன்புபோல் நிறைய மீன்களும், நண்டுகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை. பல ஆண்டுகளாக எங்களின் வருமானம் பெருமளவு குறைந்துவிட்டது“ என்று தனஞ்ஜாய் கூறுகிறார். அவருக்கு தற்போது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. “நாங்கள் வாழ்வதற்கு மீன்களும், நண்டுகளும் பிடிக்க வேண்டும். அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் எங்களுக்கு என்ன கிடைக்கும்?“ என்று கேட்கிறார்.
அதனால், ஷஷ்டியை பள்ளிக்கு அனுப்பாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார். மற்ற மாணவர்களும் சுந்தர்பன்சின் பள்ளிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நின்று வருகிறார்கள். உப்பு மண், விவசாயத்தை கடினமாக்குகிறது. அகன்றுவரும் ஆறுகள் மற்றும் அடிக்கடி வீசும் புயல் காற்றும் அவர்களின் வீடுகளை அழித்து வருகிறது. அதன் விளைவாக, இந்தப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலானோர், பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். குழந்தைகளும், பதின்பருவ மாணவர்களும் வேலை தேடி வேறு இடங்குளுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் முதல் தலைமுறை மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பள்ளி திரும்புவதில்லை.

























