தினமும் காலையில், பென்டபள்ளி ராஜா ராவ், அவரது முதுகிலோ அல்லது தலையிலோ சிவப்பு மிளகாய் மூட்டையை சுமந்தபடி மெதுவாக ஆறு தளங்கள் இறங்குகிறார். அந்த சாக்குமூட்டைகள் ஒவ்வொன்றும் சுமார் 45 கிலோ எடைகொண்டது. அதுபோல் அடுத்துவரும் சில மணி நேரங்களில் அவர் பலமுறை அதுபோல் சென்று வருகிறார். “130 படிகளை ஏறுவதைவிட இறங்குவது மிக எளிதான ஒன்றாகும்“ என்று 29 வயதான ராஜா ராவ் கூறுகிறார். அவர் தனது 19 வயதிலிருந்து இந்த வேலையை செய்து வருகிறார்.
விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தின் தரை தளத்தில் அனைத்து மிளகாய் மூட்டைகளும் இறக்கப்பட்ட பின்னர், அந்தப்பகுதியில் காத்திருக்கும் டிரக்கில் ராவும் மற்ற 11 பேரும் சேர்ந்து ஏற்றுகின்றனர். டிரக் நிறைந்த பின்னர், அது 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டூர் என்டிஆர் வேளாண் சந்தை குழு மண்டிக்கு கொண்டு செல்லப்படும்.
“அவர்கள் லாரியில் இருந்து மூட்டையை மாடியில் உள்ள பாதுகாக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.15ம், அதை மீண்டும் கீழே எடுத்து வந்து லாரியில் ஏற்றுவதற்கு ரூ.10ம் கொடுக்கிறார்கள்“ என்று ராஜா ராவ் கூறுகிறார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் உள்ள கோர்னி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாங்கள் ஒரு மூட்டைக்கு ரூ.23 மட்டுமே பெறுகிறோம். மேற்பார்வையாளர் ரூ.2ஐ கமிஷனாக எடுத்துக்கொள்கிறார். அதாவது ஒரு மூட்டையை மேலே கொண்டு செல்வதற்கு ஒரு ரூபாய் மற்றும் இறக்குவதற்கு ஒரு ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிப்ரவரி முதல் மே வரை மிளகாய் அதிகம் விற்கும் காலகட்டத்தில் விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தில் மட்டுமே மிளகாய்கள் இருக்கும். அப்போது ராஜா ராவுக்கு நாளொன்றுக்கு ரூ.300 வரை கூலி கிடைக்கும். ஆண்டின் மற்ற மாதங்களில் அவரது வருமானம் நாளொன்றுக்கு ரூ.100 அல்லது அதற்கு கீழ் வரை குறையும்.












