சோப் பவுடர் கலக்கிய தண்ணீரில் முக்கப்பட்டிருக்கும் கம்பளத்தை இளம் தலாப் ஹுசேன் மிதித்துக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு அவர் ஆடுவது போல் இருக்கிறது. அவர் முகம் புன்னகையில் நிறைந்திருக்கிறது. “முக்கப்பட்ட கம்பளத்தில் விழுந்து விடாமல் சரியாக நிற்க வேண்டும்,” என்கிறார் அவர், முன்னால் இருக்கும் ஒரு மரத்தை பிடித்துக் கொண்டு. கம்பளம் முக்கப்பட்டிருக்கும் பெரிய பாத்திரத்துக்குள் சோப் கலக்கப்பட்ட கொதிநீரை ஒருவர் ஊற்றுகிறார்.
அது, ஜம்முவின் சம்பா மாவட்டத்திலுள்ள சிறு பகர்வால் வசிப்பிடத்தின் ஒரு குளிரிரவு. புதிதாக செய்யப்பட்டிருக்கும் கம்பளிகளை அலசுவதற்கான நீர் காயவைக்கப்பட்டிருக்கும் ஒரு தற்காலிக அடுப்பிலிருந்து வருவதுதான் ஒரே வெளிச்சம்.
கம்பளிப் போர்வை நிபுணத்துவத்துக்கு பெயர் பெற்ற மெக் மற்றும் மிங் பட்டியல் சமூகத்தினரால் கம்பளிப் போர்வைகள் செய்யப்படுகின்றன. போர்வைகள் செய்யப்பட்டதும் அவை அலசப்பட்டு, பகர்வால் ஆண்களால் காய வைக்கப்படுகின்றன. போர்வைகளுக்கான நூலை வழக்கமாக பகர்வால் பெண்கள்தான் உருவாக்குவார்கள். அவற்றுக்கான நிறம் பகர்வால் குடும்பங்களின் வீடுகளில் சேர்க்கப்படுகிறது.












