பாகல்கோட் - பெல்காம் சாலையில் ஒருநாள் பிற்பகல் வேளையில் S. பந்தேப்பா, நான் அவரை சந்தித்த போது தனது ஆட்டு மந்தையை வழிநடத்திச் சென்று கொண்டிருந்தார். அவர் தனது விலங்குகளுடன் சிறிது காலம் தங்குவதற்கு விளைநிலத்தை தேடிக்கொண்டிருந்தார். "எங்களது விலங்குகளின் எருவிற்கு நல்ல பணத்தைத் தரும் நில உரிமையாளர்களை கண்டுபிடிப்பதே எங்களது வேலை", என்று அவர் கூறினார். இது குளிர்காலம், குறுபா ஆடு மேய்ப்பவர்கள் தங்களது பயணத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்குகின்றனர் ஏனெனில் அப்போது தான் விவசாய வேலை மிகக் குறைவாக இருக்கும்.
அப்போது இருந்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரே குழுவாக சேர்ந்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர் சாதாரணமாக அவர்கள் ஒரே வழியில் தான் செல்வர் அது சுமார் 600 முதல் 800 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டிருக்கும் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர், கர்நாடகாவின் இந்த குறுபா ஆடு மேய்ப்பவர்கள், பட்டியல் ஆதிவாசி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது ஆடுகள் தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன மேலும் ஆட்டினை மேய்ப்பவர்கள் விவசாயிகளிடமிருந்து தங்களின் விலங்குகளின் எருவுக்கு நல்ல தொகையை பணமாக பெறுகின்றனர். ஒரு 'நல்ல நில உரிமையாளரிடம்' இருந்து ஒரு நிறுத்தத்திற்கு 1,000 ரூபாயை, சில நாட்கள் தங்குவதற்கு தான் பெறுவதாக பந்தேப்பா கூறுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து ஓரளவுக்கு பணம் கிடைக்கும் பண்ணையை அடுத்த நிறுத்தத்திற்காகத் தேடி புறப்படுகிறார். கடந்த காலங்களில் உணவு தானியங்கள், வெல்லம், உடைகள் போன்ற பொருட்களையும் அவர் ஈடாக பெற்றிருக்கிறார், ஆனால் விவசாயிகளுடன் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது இப்போது மிக கடினமாகி வருவதாகக் கூறுகிறார்.
"எங்களது குழந்தைகள் மற்றும் விலங்குகளுடன் நில உரிமையாளர்களின் நிலத்தில் வாழ்வது (இப்போது) என்பது எளிதானது அல்ல", என்று கூறுகிறார் நீலப்பா சச்தி. பெல்காம் (இப்போது பெலகாவி) மாவட்டத்தின் பலிஹொங்கள் தாலுகாவைச் சேர்ந்த, பலிஹொங்கள் - முனாவழிச் சாலையின் அருகில் இருக்கும் ஒரு பண்ணையில் நான் அவரை சந்தித்தேன், அப்போது அவர் தனது மந்தையைக் கட்டுப்படுத்த கயிற்றால் எல்லைகளை அமைத்துக் கொண்டு இருந்தார்.
குறுபா ஆயர்கள் எதிர்கொள்ளும் ஒரே மாற்றம் இது மட்டுமல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக தென் மத்திய இந்தியாவின் தக்காணப் பகுதியில், கரடுமுரடான நிலபரப்பில் வளர்க்கப்படும் அவர்களின் விலங்குகளின் கம்பளிக்கான தேவை குறைந்து வருகிறது. வலிமையான தக்காண செம்மறியாடுகள் இந்நிலத்தின் அரை வறண்ட கால நிலையை தாங்கி கொள்ளும் திறன் படைத்தவை. பல காலமாக குறுபா ஆடு மேய்ப்பவரின் வருவாயில் பெரும்பகுதி கம்பளி (மற்றும் மகாராஷ்டிராவில் கொங்கடி அல்லது ஆந்திராவில் கொங்களி என்றழைக்கப்படுகிறது) என அழைக்கப்படும் கரடுமுரடான கருப்பு கம்பளி போர்வைகள் செய்வதற்கு அதன் ரோமத்தினை வழங்குவதன் மூலம் வந்தது. இது விவசாயிகளுக்காக உற்பத்தி செய்யப்படும் விலங்கு உரத்திலிருந்து வரும் வருமானத்துடன், கூடுதல் வருமானத்தை அளித்து வந்தது. எளிதில் மற்றும் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய நார் என்பதால், கம்பளி ஒப்பீட்டளவில் மலிவானதாகவும் மற்றும் தேவை மிகுந்ததாகவும் இருந்தது.
இதனை வாங்குபவர்களில் பெலகாவி மாவட்டத்தின் ராம்துர்க் தாலுகாவிலுள்ள தாதிபாவி சாலாப்பூர் என்ற கிராமத்தின் நெசவாளர்களும் ஒருவர். நெசவாளர்களில் பலர் குறுபா சமூகத்தை சேர்ந்தவர்கள் தான், அவர்கள் சமூகத்திலேயே ஒரு துணைக் குழுவைச் சேர்ந்தவர்கள். குறுபாக்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் கிராமங்கள் உள்ளன மேலும் ஆயர், நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் பல என பல்வேறு துணை குழுக்களாக இருக்கின்றனர். அவர்கள் நெய்த போர்வைகள் ஒரு காலத்தில் நாட்டின் ராணுவத்தினரிடையே பிரபலமாக இருந்தது, ஆனால் அவற்றுக்கு இப்போது அதிக தேவை இல்லை. "அவர்கள் இப்போது தூங்கும் பைகளை பயன்படுத்துகின்றனர்", என்று P. ஈஸ்வரப்பா என்ற நெசவாளர் விளக்குகிறார், தாதிபாவி சாலாப்பூரில் ஒரு குழித் தறி வைத்திருக்கிறார், அதில் இன்னமும் பாரம்பரிய கருப்பு கம்பளிப் போர்வைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
"தக்காண கம்பளிக்கான தேவை குறைந்துவிட்டது, இதற்கு கலப்பு செயற்கைத் துணிகள் மற்றும் இப்போது சந்தையில் பிற வகை கம்பளிகள் மலிவான விலையில் கிடைப்பதும் ஒரு காரணமாகும்", என்று ஹவேரி மாவட்டத்திலுள்ள ரனேபென்னுர் நகரத்தில் உள்ள ஒரு கடையின் உரிமையாளரான தினேஷ் சேத் கூறுகிறார், அது தாதிபாவி சாலாப்பூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.






















