வடக்கு கொல்கத்தாவின் குமார்துலி பகுதியின் குறுகிய பாதை, கையால் இழுக்கப்படும் ரிக்ஷா கடந்து செல்லும் அளவுக்கு அகலமாக இருப்பினும், அந்தப் பகுதியில் நீங்கள் வழக்கமாக சந்திக்கும் ஒரே நபர்கள் குமார்கள் எனப்படும் நகரத்திலுள்ள சிலைத் தயாரிப்பாளர்களாகவே இருப்பார்கள். இந்தப் பகுதியில் செய்யப்படும் துர்கை மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் தான் ஒவ்வொரு ஆண்டும் வழிபாட்டிற்காக கொல்கத்தாவிற்குள் செல்கின்றன..
கார்த்திக் பால் என்பவர் இந்தப்பகுதியில் ஒரு பட்டறை வைத்துள்ளார். அது உண்மையில் மூங்கில் மற்றும் நெகிழித் தாள்களால் ஆன ஒரு கொட்டகை மட்டுமேயேயாகும். அது 'பிரஜேஷ்வர் அண்ட் சன்ஸ்' (அவரது தந்தையின் பெயர்) என்று அழைக்கப்படுகிறது. அவர் ஒரு சிலையை உருவாக்கும் நீண்ட மற்றும் பல்வேறு செயல்முறைகள் குறித்து கூறினார். இதற்காக கங்கா மதி (நதியின் கரையில் உள்ள சேறு) மற்றும் பாத் மதி (சணல் துகள்கள் மற்றும் கங்கா மதி ஆகியவற்றின் கலவை) போன்ற பல்வேறு மண் கலவைகள் சிலை செய்யும் வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..










