அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. வங்கியிலிருந்து புதிதாக பெறப்பட்ட நோட்டுகள் போல அவை தொடர்ச்சியான எண்களைக் கொண்டிருந்தன. மறைத்து வைக்கப்பட்ட, அதுவரை உபயோகப்படுத்தப்படாத நோட்டுகள் எல்லாம் இப்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன என அவர் நினைத்தார். டாடிமாரி மண்டலத்தில் உள்ள 11 கிராமங்களில் இருக்கும் விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்குவதற்காக அன்ந்தபூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் அல்லது தமிழ்நாட்டிலிருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் கறுப்புப் பணம் உபயோகப்படுத்துவதாக உமேஷ் சந்தேகப்படுகிறார். . டாடிமாரி மண்டலின் மக்கள் தொகை 32,385. படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் கிராமம் இது..
உமேஷ் போன்ற ஒரு சிலரைத் தவிர, பணமதிப்பு நீக்கம் டாடிமாரி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் மோசமாகப் பாதித்திருக்கிறது. உமேஷ் பழைய நோட்டுகளைப் பெற்றுக் கொள்வதால் (அவர் அதை தனது வங்கிக் கணக்கில் சட்டப்படியான வருமானத்தின் ஒரு பகுதியாக டெபாசிட் செய்தார்) அங்கிருக்கும் விவசாயிகள் உரம் வாங்கி நீண்ட நாட்கள் கொடுக்கப்படாமல் இருந்த பணத்தை செலுத்தி வந்தனர்.
இதற்கிடையில், உரக்கடையிலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் டாடிமாரி மதுக்கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது – ஏனென்றால், அந்த கடைகள் எல்லாம் – அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை- பழைய நோட்டுகளை ஏற்றுக் கொண்டன.
`இந்த 50 ரூபாயைத்தான் திரும்பப் பெற்றோம்’ என்று லேசான போதையிலிருந்த சின்ன கங்கண்ணா ஒரு தாளை எங்களிடம் காண்பித்தார். அவர் தன்னிடமிருந்த 1000 ரூபாய் நோட்டைக் கொண்டு மது வாங்கினார் – அதை வேலையற்ற விவசாயத் தொழிலாளர்கள் 8 பேர் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். 500 ரூபாய் நோட்டை மாற்றுவதற்குக் குறைந்தபட்சம் 400 ரூபாய்க்கு மது வாங்க வேண்டும்.
டாடிமாரி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் அவர்களுடைய பழைய ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றுவதற்கான வழி மது வாங்குவதுதான் என்று நினைக்கிறார்கள். விவசாயிகளின் வயல்களில் டிராக்டர் ஓட்டுபவர் எஸ். நாகபூஷணம். இவர் ஒவ்வொரு நாளும் வேலை முடிந்த பிறகு குவார்ட்டர் பாட்டில் மது குடிப்பது வழக்கம். ஒரு குவார்ட்டர் சாராயத்தின் விலை ரூ 60 லிருந்து ரூ 80 க்குள் இருக்கும். இப்போது நாகபூஷணம் வழக்கமாகக் குடிப்பதை விட 4-5 மடங்கு அதிகமாகக் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய தினசரிக் கூலி 500 ரூபாய் – ஆனால் இப்போது அவருக்கு வேலையில்லை, எனவே அவரது வருமானம் முழுவதும் பழைய நோட்டுகளாகத்தான் இருந்தன. அதை அவர் மதுக்கடையில் செலவு செய்தார்.
நாகபூஷணம் போல, டாடிமாரியில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்த வருடம் அனந்த்ப்பூரில் மழை சரியாகப் பெய்யாததால் நிலக்கடலைப் பயிரின் விளைச்சல் மிகவும் மோசமாக இருந்தது. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்துவிட்டிருந்தனர், கூலி கிடைக்கும் வேலைநாட்களும் குறைந்து விட்டன.
டாடிமாரி மண்டலில் இருக்கும் விவசாயிகள் நிலக்கடலைப் பயிரை தீபாவளிக்குப் பிறகு நவம்பர் மாதம் அறுவடை செய்து டிசம்பர் மாதம் வரை அதை விற்பார்கள். விவசாயிகள் அவர்களுடைய வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கூலி கொடுப்பதில்லை. தொழிலாளர்களுக்கான மொத்தக் கூலியும் அறுவடைக்குப் பிறகு தான் கொடுக்கப்படும். எனவே, விவசாயிகளுக்கு வருடத்தில் இந்த சமயத்தில் அதிகமான பணம் தேவைப்படும்.
இந்தப் பணத்தை விவசாயிகள் அவர்களுக்குள்ளாக மாதம் 2 சதவிகித வட்டியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கும் பயன்படுத்துவது வழக்கம். ‘நாங்கள் இந்தப் பணத்தை இப்போது கொடுக்கவில்லையென்றால், வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கும்’ என்று டாடிமாரி கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியான பிரமானந்த ரெட்டி கூறினார்.
பணமதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு ரெட்டி அவருடைய நிலக்கடலைப் பயிரை விற்றதற்கு மற்ற மாவட்டத்திலிருக்கும் வியாபாரிகள் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைதான் கொடுத்தனர். அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார். ஆனால் அவருடைய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கும், தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கும் அதிகத் தொகை புதிய நோட்டுகளாக வேண்டியிருந்தது – டாடிமாரி மண்டலில் இருக்கும் மூன்று வங்கிகளில் இந்தப் புதிய நோட்டுகள் பற்றாக்குறையாக இருந்தன.