“இன்று காலை மூன்றாவது முறையாக எனது கழுதை தண்ணீர் சுமந்து கொண்டு இம்மலையில் நடந்து கொண்டிருக்கிறது”, என வருந்துகிறார் டலி பாதா. “அதிக முறை மலையேறி இறங்குவதால் சோர்வடையும் கழுதைக்கு அத்தியாவசியமான உணவைக் கூட எங்களால் வழங்க முடியவில்லை.”
ஜூன் மாதத்தின் இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் 53 வயதான டலி பாதாவின் வீட்டை சென்றடைந்த பொழுது எஞ்சியிருந்த பருப்பு மற்றும் புற்களை கழுதைக்கு உணவாக வழங்கிக் கொண்டிருந்தார். அவரது கணவர் படாஜி பாக்ரி ராஜஸ்தான மொழியில், “மழை பொழியும் என நம்புகிறேன்”, என்றார். “மழைக்காலத்தில் தண்ணீர் மிகவும் அசுத்தமாகிவிடும். அப்பொழுதும் மழையையும் பொருட்படுத்தாமல் கழுதையின் உதவியுடன் என் மனைவி நீர் எடுக்க செல்ல வேண்டும்”.
ராஜஸ்தானின் உதய்ப்பூர் மாவட்டத்தின் ரிஷப்தியோ வட்டத்தில் அமைந்திருக்கும் சுமார் 1000 மக்கள் வசிக்கும் பாச்சா பத்லா கிராம மக்களும் மிருகங்களும் மழை நீர் ஓடையை மட்டுமே குடிநீருக்காக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த ஓடை வற்றும் போது பூமியில் ஆழமான குழிகள் மட்டுமே இவர்களது குடிநீருக்கான ஆதாரம். மழைக் காலத்தில் இக்குழிகள் மழை நீரில் அடித்து வரப்படும் கழிவுக் பொருட்களால் நிரம்பி விடுவதால் இவர்களது நீருக்கான தேடல் அதிகரிக்கிறது. இக்கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் வீட்டில் வளர்க்கும் கழுதைகளை நீர் சுமந்து வர பயன்படுத்துகின்றனர்.
கழுதைகளால் சுமந்து வரப்படும் நீர் வீட்டின் பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும் பெண்கள் இதர வீட்டு உபயோக பொருட்களை சுத்தப்படுத்தவும் ஆடைகளையும் துவைக்கவும் நீர் கிடைக்கும் ஓடைகள் அல்லது குழிகளுக்கு சுமந்து வர நேர்கிறது. இக்கிராமவாசிகள் கழுதைகளை ஆண்டு முழுமையும் பலன் தரும் முதலீடுகளாகவே கருதுகின்றனர்.






