சரியாக காலை 4.45 மணிக்கு குஞ்ச் கிராம வீடுகளில் உள்ள பாரம்பரிய அழகுபடுத்தப்பட்ட கதவுகள் ஒவ்வொன்றாக திறக்கின்றன. மக்கள் தண்ணீர் பாட்டிலை கையில் ஏந்தியபடி வெளியே வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை, தகரம் அல்லது ஸ்டீல் பாத்திரங்களை தங்கள் கையில் கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது இந்த தினசரி சடங்கிற்கு பிளாஸ்டிக் பாட்டில் உதவியாக இருக்கிறது.
ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து நலம் விசாரித்து விட்டு வெவ்வேறு திசைகளில் விவசாய நிலங்களுக்கு செல்கிறார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து விட்டதால் பல தரிசாக உள்ளன. இந்த அதிகாலை வேளையிலும், ஒரு சிலர் வெற்று பாட்டிலோடு வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
அடர்த்தியான மற்றும் உயரமான புதர்கள் சிறந்த இடமாக கருதப்படுகிறது. 3,200 மீட்டர் உயரத்தில் இவை சிதறுண்டப் பகுதியாக காட்சியளிக்கிறது. சீக்கிரமாக எழுந்து வெளியே வருபவர்களுக்கு சிறந்த இடம் கிடைக்கிறது. பனி மூடிய ஏபி மலைத்தொடர் செந்நிறமாக மாறுவதற்கு மற்றும் காலை வெயில் வறுவதற்கு முன்பாக, குஞ்ச் குடியிருப்புவாசிகள் தங்கள் காலை கடனை கழிக்க செல்கிறார்கள்.
அருகிலேயே குதி-யாந்தி நதி ஆர்பரித்து ஓடுகிறது. குதிரைகளின் மணிச் சத்தமும் கற்பாதைகளில் அதன் காலடி சத்தமும் ஒருசேர கேட்கின்றன. அதன் உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் 50கிமீ தொலைவிலுள்ள கார்பதாருக்கு இந்த விலங்குகளை அழைத்துச் செல்கிறார்கள். இந்திய-சீன எல்லை வர்த்தக ஏற்றுமதி பொருளை ஏற்றுவதற்கு இங்குதான் அவர்கள் காத்திருப்பார்கள். எல்லைப்பகுதி இன்னும் 22கிமீ தொலைவில்தான் உள்ளது.








