1968 டிசம்பரின் கடைசி வாரத்தில், வெண்மணி கிராமத்தின் கீழ்வெண்மணி குக்கிராமத்தில் அடக்குமுறை செய்து வந்த நிலவுடமையாளர்களுக்கு எதிராக வெகுகாலமாக கொதித்துக் கொண்டிருந்த, தொழிலாளர்களின், போராட்டம் உச்சத்தை எட்டியது. கூலி உயர்வு, விவசாய நிலங்கள் மீதான அதிகாரம், நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், நிலமற்ற தலித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிலவுடமையாளர்களின் பதில் என்னவாக இருந்தது தெரியுமா? குக்கிராமத்தில் இருந்த 44 தலித் தொழிலாளர்களை உயிருடன் எரித்து கொன்றனர். தலித் மக்களிடம் கிளர்ந்தெழுந்த அரசியல் விழிப்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாத பணபலம் கொண்ட நிலவுடமையாளர்கள், அண்டை கிராமங்களிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தனர். அதோடு மட்டுமல்லாமல், பெருமளவில் தாக்குதல் தொடுக்கவும் திட்டமிட்டனர்.
டிசம்பர் 25 ஆம் தேதி இரவு, நிலவுடமையாளர்கள் குக்கிராமத்தை சுற்றி வளைத்தனர். தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்து தொழிலாளர்களை தாக்கினர். 44 நபர்களை கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்று குடிசை ஒன்றில் நுழைந்தது. அவர்கள் உள்ளே வைத்து பூட்டப்பட்டார்கள். தாக்கியவர்கள் அக்குடிசைக்கு தீ வைத்தனர். உள்ளே இருந்த அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டனர். கொல்லபட்டவர்களில் பாதிபேர் 16 வயதுக்கு கீழிருந்த 11 ஆண் மற்றும் 11 பெண் குழந்தைகள். இருவருக்கு 70 வயதுக்கும் மேல். மொத்தத்தில் 29 பெண்கள், 15 ஆண்கள். அவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்த தலித் மக்கள்.
1975-ம் ஆண்டில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேரையும் அன்றைய மெட்ராஸ் உயர்நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் அந்த கொடுஞ்செயலை ஆவணப்படுத்திய மைதிலி சிவராமன், அவருடைய சக்திவாய்ந்த தொடர் எழுத்துகளாலும் விரிவான பகுப்பாய்வுகளாலும் படுகொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். மேலும் அங்கு இருந்த வர்க்கம் மற்றும் சாதி ஒடுக்குமுறையின் அடிப்படை சிக்கல்களையும் வெளிக்கொண்டு வந்தார். கோவிட் தொற்றால் 81 வயதில் மைதிலி சிவராமன் மறைந்த இந்த வாரத்தில், அந்த துக்க சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட இந்த கவிதையை நாங்கள் வெளியிடுகிறோம்.



