சையது கனி கான் அன்று மயக்கம் போடும் நிலையை அடைந்துவிட்டார். அவரின் நிலத்தில் பயிர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் அசாதாரணமாக உணர்ந்தார். பயிர்களுக்கு அவர் அடித்துக் கொண்டிருந்த பூச்சிக் கொல்லி மருந்தின் நெடி தலைசுற்ற வைத்தது. “அப்போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எனக்கு எழுந்தது? இந்த பூச்சிக்கொல்லி மருந்து அடித்து நானே இப்படி உணருகிறேன் எனில், இந்த நெல்லை உண்ணும் மக்களுக்கு நான் விஷத்தை கொடுக்கிறேன் என்று பொருள்,” என்கிறார் அவர்.
இருபது வருடங்களுக்கு முன் 1998ம் ஆண்டு நேர்ந்த அந்த திருப்பத்துக்கு பிறகு கனி, ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதை நிறுத்தினார். மேலும் அவர் உள்நாட்டு நெல் ரகத்தையே விளைவிக்கத் தொடங்கினார். “என்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தின் மூத்தவர்கள் நிலத்துக்கு செல்லும்போது நானும் கூட சென்றிருக்கிறேன். அவர்கள் பயிரிட்ட பல பயிர்களோடு ஒப்பிடும்போது உள்நாட்டு ரக நெல் குறைவாகவே இருந்தது,” என நினைவுகூர்கிறார்.
மாண்டியாவில் 10 பேருக்கும் குறைவானவர்களே உள்நாட்டு வகைகளை இயற்கை முறையில் விளைவிப்பதாக சொல்கிறார் 42 வயது விவசாயி. அவர் இருக்கும் மாண்டியா மாவட்டத்தில் 79,961 ஹெக்டேர்களில் நெல் விளைவிக்கப்படுகிறது. “அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் சமயங்களில் குறைவான விளைச்சலே கிட்டுவதாலும் உள்நாட்டு நெல் ரகம் அதற்கான முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. பயிரைவிட அதிகமாக களைகளே இருக்கும்,” என்கிறார் அவர்.







