“அவற்றை நீங்கள் கொஞ்சம் தேன் அல்லது வெல்லம் போன்ற இனிப்புகளுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் கிராமப்புற சுகாதார ஒருங்கிணைப்பாளரான உர்மிளா டுக்கா, பாட்டியின் மடியில் இருக்கும் மூன்று வயது சுகானியை பார்த்துக் கொண்டே.
குழந்தையின் பாட்டி, இன்னொரு சுகாதார ஒருங்கிணைப்பாளரான சாவித்ரி நாயக் மற்றும் ஆரம்ப சுகாதார ஊழியரான மங்கி கஞ்ச்லான் ஆகிய மூன்று பெண்களின் கூட்டு திறன் விடாமுயற்சி மற்றும் அன்பில்தான் கசப்பான மலேரியா மாத்திரைகள் குழந்தையால் விழுங்க முடிகிறது.
மூத்த கிராமப்புற சுகாதார ஒருங்கிணைப்பாளரான 39 வயது உர்மிளா குழந்தை பற்றிய தகவல்களை பெரிய பதிவேட்டில் அவருக்கு முன் விளையாடும் குழந்தைகள் எழுப்பும் சத்தத்துக்கு மத்தியில் குறித்துக் கொள்கிறார். அவருடைய தற்காலிக மருத்துவ மையம் சட்டீஸ்கரின் நவுமுஞ்ச்மேடா கிராமத்தின் அங்கன்வாடியின் முற்றத்தின் ஒரு பகுதிதான்.
மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் அங்கன்வாடியில் இரு வேலைகள் நடக்கும். ஒரு பக்கம் குழந்தைகள் எழுத்துகளை கற்றுக் கொண்டிருக்கையில் மறுபக்கம் தாய்களும் கைக்குழந்தைகளும் பிறரும் பரிசோதனைக்காக வரிசையில் நிற்பார்கள். உர்மிளாவும் அவரின் குழுவினரும் காலை 10 மணி அளவில் வருவார்கள். அவர்களின் பைகளை திறந்து பதிவேடுகளையும் தடுப்பு மருந்து உபகரணங்களையும் பரிசோதனை உபகரணங்களையும் எடுத்து வைப்பார்கள். ஒரு மேஜையையும் பெஞ்ச்சையும் முற்றத்தில் போட்டு நோயாளிகளை பார்க்க தயாராவார்கள்.
சுகானிக்கு அன்றைய தினம் நடத்தப்பட்ட பரிசோதனை, உர்மிளாவும் 35 வயது சுகாதார ஒருங்கிணைப்பாளரான சாவித்ரி நாயக்கை உள்ளடக்கிய குழுவினரும் ஆறு கிராமங்களில் ஒரு வருடத்தில் நடத்தும் 400 மலேரியா பரிசோதனைகளில் ஒன்றாகும்.
”மலேரியா நமது மிகப் பெரிய சுகாதார பிரச்சினை,” என்கிறார் நாராயண்பூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அலுவலரான டாக்டர் ஆனந்த் ராம் கோடா. “ரத்த அணுக்களையும் கல்லீரலையும் அது பாதித்து ரத்தசோகையை உருவாக்குகிறது. விளைவாக நலிந்த ஆரோக்கியமே கிட்டும். அதன் காரணமாக வருமானமும் பாதிக்கப்படும். குழந்தைகள் குறைந்த எடையில் பிறப்பார்கள். மொத்தமும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நடக்கும்.”










