சில வருடங்கள் முன்புவரை காளி கலக்ஷேத்ராவின் பெயரைக்கூட கேள்விப்பட்டதில்லை. கோவளம், சுனாமி மறுபுணரமைப்பு மையத்தில் நடனமாடிய காளியின் தீவிரத்தையும் ஆர்வத்தையும் முதலில் கண்டுகொண்ட சாரா சந்திரா, காளியின் உபயதாரர், காளியிடம் கலாக்ஷேத்ராவில் முறையாக நடனம் பயிலச்சொல்கிறார். தனது தூரத்து உறவினர்கள் நடனம் போன்ற பெண்களுக்கான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தொடர்ந்து நம்பிக்கையிழக்கவைக்க முயன்றாலும், காளி நேர்முகத் தேர்வில் வென்று நாட்டியப் பள்ளியில் அனுமதி பெறுகிறார். ஒரு கஷ்டத்தைக் கடந்தாலும் மற்றொன்று அவருக்காகக் காத்திருக்கிறது.
தமிழ்வழிக் கல்வியில் பயின்ற, பரதநாட்டியம், பாரம்பரிய இசை போன்றவற்றுடன் அதிகத் தொடர்பில்லாத காளிக்கு, கலாக்ஷேத்ரா போன்ற இடம் முதலில் பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அசைவ சாப்பாட்டையே உண்ணும் அவருக்கு அங்கு சுத்த சைவ சாப்பாடு மட்டுமே கிடைப்பது உடலளவில் சோர்வை ஏற்படுத்துகிறது. “நான் அப்போ குண்டா இருந்தேன்!” காளி சிரித்துக்கொண்டே தன் அடிப்பாகம் துறுத்திக்கொண்டு, கால்கள் புடைத்தபடி, கைகளைக் கோணலாக்கி எப்படி முன்பு ஆடினார் என்று செய்துகாண்பிக்கிறார். அங்கிருந்த நிறைய வெளிநாட்டவர்களைவிடவும் காளி கொஞ்சம் தேவலாம்தான், இந்தக் கலாச்சாரம் எந்தளவிற்கு அவர்களுக்கு அந்நியமோ அதே அளவிற்கு காளிக்கும் என்பதால்; ஆனாலும் அவர் ஆங்கிலத்தில் உரையாடமுடியாமல் தவிக்கிறார்.
எனவே அதற்கும் அவர் தேர்ந்தெடுப்பது நாட்டியம். வார்த்தைகளுக்கு பதில் சைகைகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டவர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் வெட்கத்தைப் போக்கி, முதல் வருட மாணவர்கள் தினத்திற்கு சில மாணவர்களுடன் சேர்ந்து ரஷ்ய மற்றும் தென் ஆப்பிரிக்க பெண்களை ஒயிலாட்டத்திற்கு ஆட வைக்கிறார். கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் அதற்காக அவரைப் பாராட்டுகிறார். அனைத்திற்கும் மேல், வகுப்பில் முதல் மாணவராகவும் வருகிறார். அவருடைய தன்னம்பிக்கை வளர்வதுபோல் நாட்டியத்தில் அவரின் ஞானமும் வளர்கிறது.
இப்பொழுது காளியால் ஒரு ராகத்தை ஒரு நொடியில் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். கலாஷேத்ராவின் தோற்றுனர் நாட்டியப் பேரொளி ருக்மினி தேவி அருண்டேலின் நினைவாக எழுப்பப்பட்ட ருக்மினி அரங்கத்தில் தன்னுடைய அரங்கேற்றங்களின்போது ராகங்களைக் கண்டுபிடித்து தனது நண்பர்களில் ஒருவரிடம் அது சரியா என்றும் கேட்கிறார். பெரும்பாலும் அவர் கண்டுபிடிப்பு சரியானதாகத்தான் இருக்கிறது. ஆரம்பகாலகட்டத்தில் இருந்ததுபோல் அழகின்மையுடன் இல்லாமல், அவர் ஆடும்பொழுது அவருடைய அடவுகளும் பாவனைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.