ஓரிரவில் மட்டும் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானத்தை இழந்ததாக கணக்கிடுகிறார் தாய்பாய் குலே.
கடும் மழை தொடங்கியபோது தன் கிராமத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் பலவானியில் இருந்தார் அந்த 42 வயதுக்காரர். “மாலை ஐந்து மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவுக்கு மேல் அதிகமானது,” என்கிறார் அந்த மேய்ப்பர். புதிதாக உழப்பட்டிருந்த நிலம் விரைவில் சகதியானது. 200 விலங்குகள் கொண்ட அவரின் மந்தை, சகதியில் நகர முடியாமல் திணறியது.
“சகதியில் (முழு இரவும்) அமர்ந்திருந்தோம். பெருமழையில் விலங்குகளுடன் நாங்களும் முழுமையாக நனைந்திருந்தோம்,” என்கிறார் அவர் மகாராஷ்டிராவின் அகமது நகரில் டிசம்பர் 2021-ல் பெய்த கன மழையை நினைவுகூர்ந்து.
“கன மழைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டதில்லை. இதுதான் முதல் தடவை,’ என்கிறார் தவல்புரி கிராமத்தை சேர்ந்த தாய்பாய். எட்டு செம்மறிகளையும் ஒரு பெண் ஆட்டையும் அவர் இழந்தார். “அவற்றை காப்பாற்ற நாங்கள் விரும்பினோம்.”
சதாராவில் கடுமையாக மழைப்பொழிவு இருந்தது. அந்த மாவட்டத்தில் பெரும்பாலான தாலுகாக்களில் 100 மிமீ மழை டிசம்பர் 2, 2021-ல் பதிவானது.









