“ஜரியாவில் இருக்கும் எங்கள் வீட்டில் 4-5 மாதங்களாக மின்சாரம் கிடையாது. சகோதரன், சகோதரி மற்றும் நான் டார்ச் வெளிச்சத்தில்தான் படிக்கிறோம். 30-45 நிமிடங்களுக்கு டார்ச் தொடர்ந்து வேலை செய்யும். பிறகு மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.”
13 வயதாகும் சோம்பாரி பாஸ்கி, சந்தால் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவள். படின் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் அவள், பள்ளி படிப்பை முழுவதுமாக முடிப்பதில் உறுதியாக இருக்கிறாள்: “நான் [முறையான கல்வியை] படிக்க விரும்புகிறேன். இதுவே என் கனவு.”
ஜாதுகோரா வட்டாரத்தில் உள்ள ஜரியா கிராமத்தின் மக்கள் தொகை 1000க்கும் மேல் இருக்கும். ஜார்கண்டின் சராசரி கல்வியறிவான 66 சதவிகிதத்திற்கும் குறைவாக 59 சதவிகிதத்தினர் மட்டுமே இங்கு படிப்பறிவு பெற்றுள்ளனர். புர்பி சிங்பும் மாவட்ட ஜரியாவில் ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. எனவே நடுநிலைப் பள்ளிக்கு சோம்பாரி, வீட்டிலிருந்து தினமும் நான்கு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.
இந்த நிருபர் அருகிலுள்ள கிராமமான காரியா கோச்சாவுக்குச் சென்றபோது, சபார் மொழியிலிருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பாளராக முன்வந்து கையை உயர்த்தியவர்தான் சிறுமி சோம்பாரி. கிழக்கு சிங்புமின் சபர் சமூக மக்களிடம் செய்தியாளர் உரையாடுவதற்கு அச்சிறுமி உதவினாள். தாய் மொழி சந்தாலியுடன் சபர், ஹோ, இந்தி, வங்காள மொழிகளையும் சோம்பாரி அறிந்துள்ளார்.







