மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் மாதத்தின் நடுவில் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே, கோபால் குப்தா இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக மும்பையை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார்.
ஆனால், இதற்கு மாறாக, மார்ச் மாதத்தின் இறுதியிலேயே, ஒரு சிறிய மண்பானையில் அவரது எரியூட்டப்பட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு அவரது குடும்பம் அவர்களது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் குசௌரா தாலுக்காவில் உள்ள சஹாட்வேர் கிராமத்திற்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றனர்.
கோபாலின் 21 வயது மகள் ஜோதி கூறுகையில் "எனக்கு தெரியவில்லை என் தந்தையின் மரணத்திற்கு கொரோனா மீது மட்டுமே குற்றம்சுமத்த முடியுமா என்று. ஒருவேளை அவர் உயிர் பிழைத்திருந்தால் கூட ஒரு காலை இழந்து தான் வாழ்ந்திருப்பார்" என்கிறார்.
கல்யாண் பகுதியில் காய்கறி விற்று வரும் 56 வயதான கோபாலுக்கு, மார்ச் முதல் வாரத்தில் லேசான இருமலும் - சளியும் ஏற்பட்ட நிலையில் பலவாணி பகுதியில் உள்ள பஸ்டி மருத்துவமனைக்கு சென்று சில மருந்துகளை எடுத்துக்கொண்ட நிலையில் நலமாக உணர்ந்துள்ளார். அதே பலவாணி பகுதியில் தான் அவரது குடும்பம் இரண்டு அறை கொண்ட வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் பென்ஸ்திஹ் தாலுகாவிலுள்ள அவரது கிராமத்தில் அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் , ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு மாதங்களே கடந்த நிலையில் அவர் வேலை நன்றாக சென்றுகொண்டிருந்த போதுதான் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அவரது குடும்பம் மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்லுவதற்கு தயாராகி உள்ளனர். ஜோதி கூறுகையில்,"எனது தந்தை கடந்த ஆண்டை போல இங்கு தங்கியிருந்து அபாயத்தில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.
ஆனால், கடந்த மார்ச் 10 அன்று அதிகாலை 5 மணியளவில், கோபால் மூச்சுவிடுவதில் சிரமத்தை உணர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரை அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று ,பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பம் கே.டி.எம்.சி (கல்யாண் டோம்பிவலி மாநகராட்சி நிர்வாகத்தின்) மைதானத்தில் கொரோனாவுக்காக அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த 'கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில்' அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவரை சிறப்பு சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்றுமாறு அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அன்று மதியமே, கோபாலை கல்யாண் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
"எங்களுக்கு என் தந்தையை எங்குக் கொண்டுசெல்வதென்றே தெரியவில்லை. மிகக்குறைந்த நேரமே இருந்தது, என் தந்தை மற்றும் எனது சகோதரனின் உடல்நிலை குறித்து நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தோம்" என்று ஜோதி கூறினார். ஜோதியின் சகோதரன் 26 வயதான விவேக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பிவாண்டி பகுதியில் உள்ள கொரோனா மையத்தில் 12 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.










