“என் படிப்பு முடிந்தபிறகு நான் ஊர்க்காவல் படை அதிகாரியாவேன்,” என்கிறாள் 14 வயதாகும் சந்தியா சிங். அவளது சகோதரனான 16 வயதாகும் ஷிவம் ராணுவத்தில் சேர்வதற்காக இரண்டு வருடங்களாக ‘பயிற்சி’ எடுத்து வருகிறான். “அதிகாலை 4 மணிக்கு எழுந்து தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்“ என்கிறான். “ராணுவத்திற்கான பயிற்சிகளை யூ டியூப் மூலம் கற்கிறேன் - பார்களில் தொங்கும் பயிற்சி, பஸ்கி எடுத்தல் போன்ற பல பயிற்சிகளை நான் செய்கிறேன்.“
உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டம் பினாரா கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டு மாடியிலிருந்து தொலைப்பேசி மூலம் என்னிடம் அவர்கள் பேசினர். பெற்றோர் வேலை செய்துவந்த ஆந்திரப் பிரதேசத்தின் கலிகிரி கிராமத்திலிருந்து மே 21ஆம் தேதி இவர்கள் வீடு திரும்பினர். “நாங்கள் வீட்டிற்கு வந்தபோது, இங்கு ஒன்றுமே இல்லை, எங்கள் கையிலும் எதையும் கொண்டு வரவில்லை,“ என்கிறார் 32 வயதாகும் அவரது தாய் ராம்தேகாளி. “அன்றிரவு நாங்கள் வெறும் வயிற்றுடன் தூங்கினோம்…“
10ஆம் வகுப்புத் தேர்வில் ஷிவம் 71 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுவிட்டதாக ஜூலை 8ஆம் தேதி ராம்தேகாளி என்னிடம் தொலைப்பேசி மூலம் தெரிவித்தார். 11ஆம் வகுப்பில் சேர்ப்பது குறித்து கேட்டபோது, அவரது குரல் கம்மியது. “இணையவழிப் பள்ளியில் சேர்வது குறித்து எங்கள் பிள்ளைகள் கவலையில் இருக்கின்றனர். நாங்கள் மீண்டும் அங்கு சென்றுவிட்டால் [ஆந்திராவிற்கு], தொலைப்பேசியையும் எடுத்துச் சென்றுவிடுவோம். பிறகு எப்படி ஷிவம் இணைய வழி வகுப்பில் பங்கேற்பது? நாங்கள் இங்கு தங்கிவிட்டால் அவனது கல்விக்கு எப்படி பணம் கட்டுவது?“ என்று கேட்கிறார் அவர். தனியார் பள்ளியில் படிக்கும் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் ஆண்டுக் கட்டணம் தலா ரூ. 15,000.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலிகிரி கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் ராம்தேகாளியும், அவரது கணவரான 37 வயதாகும் பிரேந்திரா சிங்கும் மூன்று பானிப்பூரி கடைகளை நடத்தி வந்தனர். அவர்களுடன் சந்தியாவும், ஜலான் மாவட்டத்தின் பர்தார் கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில் ஷிவமும் வசித்து வந்தனர். பால் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் நாடோடி பழங்குடியினரின் பட்டியலில் உள்ளனர்.









