சதி மணி இரவு கிளம்புவதற்கு முன் ஒருமுறை வீட்டை சுற்றி பார்த்துக் கொள்கிறார். முக்கியமான ஆவணங்களும் துணிகளும் நெகிழிப்பையில் வைக்கப்பட்டு சுவர்களில் தொங்குகின்றன. சமையல் பாத்திரங்கள் தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் இருக்கும் சிமெண்ட் திண்டுகளில் இருக்கின்றன.
”பல முறை அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்திருக்கிறேன். வீட்டுக்குள் தண்ணீர் வந்திருக்கும். எவ்வளவு துவைத்தாலும் மாறாத கறைகளாலும் நாற்றத்தாலும் பல தலையணைகளையும் போர்வைகலையும் தூக்கி எறிந்திருக்கிறேன், என்கிறார் 65 வயது சதி. கொச்சியின் தேவரா பெரந்தூர் நீரோடையின் கரையில் இருக்கும் காந்தி நகரில் வசிக்கிறார்.
வடக்கே இருக்கும் பெருந்தூர் புழாவிலிருந்து தெற்கே கொச்சி வரை பெரந்தூர் புழா பாய்கிறது. கிட்டத்தட்ட 9.84 கிலோமீட்டர் தொலைவுக்கு பாயும் நீரோடை அது. கொச்சியின் 11 பிரதான நீர்வழிப்பாதைகளில் அதுவும் ஒன்று. எர்ணாகுளத்தை சுற்றி இருக்கும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய அரசு அந்த நீர்வழிப்பாதை சரியான தீர்வாக இருக்குமென அரசு சொல்லி வருகிறது.
கடந்த முப்பது வருடங்களில் கொச்சி நகரத்தின் மக்கள்தொகை இரட்டிப்பாகி 21 லட்சமாகிவிட்டதால், ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்தை கொண்டிருக்கும் நீரோடை திறந்தவெளி சாக்கடையாக மாறி வருகிறது. இரு இடங்களில் மெட்ரோ கட்டுமான வேலைகளாக அடைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை கழிவுகளும் நீரோடைக்கு பக்கத்தில் இருக்கும் உள்ளூர் சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் யாவும் அவற்றின் குப்பைகளை நீரோடைக்குள்தான் கொட்டுகின்றன. கிட்டத்தட்ட 632 குழாய்களும் 216 சாக்கடை கால்வாய்களும் தொழிற்சாலை கழிவுகளும் மழைநீரும் நேரடியாக நீரோடைக்குள்தான் கலக்கின்றன. குப்பைகள் கரைகளில் தேங்கியிருப்பதால் நீரோடையின் அகலம் பல இடங்களில் வெறும் 8 மீட்டர்களுக்கு சுருங்கியிருக்கிறது.
சதியின் வீடு நீரோடையின் கரைப்பகுதியில் எர்ணாகுளம் ரயில்வே நிலையத்துக்கு பின் இடம்பெற்றிருக்கிறது. அவர் வசிக்கும் பி&டி காலனி கிட்டத்தட்ட 250 மீட்டர் நீளத்துக்கு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. உடனடியாக மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு வீட்டை பொறம்போக்கு நிலத்தில் அமைத்துக் கொள்வது வாடகைக்கு வசிப்பதை காட்டிலும் செலவு குறைந்த விஷயம் என்கிறார்கள் இங்கு வசிப்பவர்கள். வைக்கோல் கூரை மற்றும் தார்பாலினில் அமைக்கப்பட்ட வீடுகளை இருபது வருடங்களுக்கு முன்பு உள்ளூர் பாதிரியார்களின் உதவி கொண்டு பாதி கான்கிரீட் வீடுகளாக தகரக் கூரைகளை வைத்து அவர்கள் அமைத்துக் கொண்டனர்.










