“இந்த ஆண்டு நிறைய மழை பெய்தது. அதனால் ஓடையில் இருந்து வரும் நீர் நீண்ட காலம் நீடிக்கும் என்று நினைத்தேன். எனவே எனது கணவரிடம் கிராமத்திலேயே தங்கி விடும்படி கூறினேன். நாம் இன்னும் சில காய்கறிகளை பயிரிடலாம் என்றேன். பிழைப்புக்காக புலம்பெயர்வதை விட எங்களது சொந்த பண்ணையில் வேலை செய்வது மிகவும் சிறந்தது. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்” என்று எனது பெரியம்மாவான ஜெயஸ்ரீ பரீத் மேகமூட்டத்துடன் இருக்கும் வானத்தை பார்த்தபடி கூறுகிறார். அது 2019 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம். “குளிர் காலம் துவங்கிவிட்டது ஆனால் காற்றில் குளிர் இல்லை. மழைக் காலம் முடிவடைந்து விட்டது ஆனால் வானம் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் என்னுடைய வெந்தயக் கீரை மற்றும் பாலக்கீரை ஆகியவை இறந்து விடும் தருவாயில் உள்ளது. நேற்று வரை கடுகுச் செடிகள் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் இன்றைக்கு அதிலும் பூச்சிகள் வந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?” என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பெரியம்மா பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார்.
வானிலை மாறிவிட்டது. எங்களுக்குப் போதுமான வெயில் நாட்கள் கிடைப்பதில்லை. அது தான் எல்லாவற்றிற்குமான (நோய்த் தொற்றுக்கு) காரணம். இந்தப் (பூச்சி மருந்துகளை) விற்கும் கடைக்காரரும் கூட அதைத் தான் சொல்கிறார். "நிச்சயமாக அவருக்கு இதைப்பற்றி இன்னும் அதிகமாக தெரியும் என்று நம்புகிறேன்", என்று அவர், என்னுடைய தலை அசைத்தலை எதிர்பார்த்தபடி கூறினார். கருகல் நோய் நிலம் முழுவதும் பரவி அனைத்து காய்கறிகளும் வீணாகிவிடும் என்று அவர் கவலைப்பட்டார். "இந்த ஒரு கூறு நிலப் பகுதியில் இருந்து வரும் காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் எனக்கு 200 முதல் 250 ரூபாய் வரை கிடைத்திருக்கும். ஆனால் அதில் பெரும்பாலான செடிகள் முளைக்கும் போதே கருகிவிட்டது. இப்போது முளைத்ததும் கருகிவிட்டது. இதிலிருந்து நான் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை அதனால் எனக்கு பதற்றமாக உள்ளது. பீன்ஸும், சுரையும் பூத்தது ஆனால் எல்லா பூக்களும் கருகி உதிர்ந்து விட்டது. பீன்ஸிலும் நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டது", என்று பெரியம்மா தொடர்ந்தார்.
அவர் காய்கறிகளை கூடையில் வைத்து தலையில் தூக்கி சுமந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து கணேஷ்புரிக்கு சென்று தெருவில் உட்கார்ந்து அந்த காய்கறிகளை விற்கிறார் அல்லது சில நேரங்களில் பஸ் ஏறி வசையில் இருக்கும் சந்தைக்குச் செல்கிறார்; இது எனது பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கு வாரம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டித் தரும். அதுவே அவர்களின் ஒரே வருமான ஆதாரம் ஆகும்.






