ஒரு மதிய வேளையில் நட்சுர் கட்காரிவாடி ஊரில் உள்ள கோயிலுக்கு சில கார்கள் வந்தன. விஷ்ணு வாக்மாரே வெளியே எட்டிப் பார்த்தார். பிறகு கட்காரி மொழியில் ஏதோ சொன்னார். 15 ஆண்களும் பெண்களும் கொண்ட ஒரு குழு வெளியே சென்று வந்தவர்களை வரவேற்றது.
"வேலைக்கு ஆட்கள் எடுக்க அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பேரம் பேசுவதற்கு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களால் (காண்ட்ராக்டர்களால்) ஏமாற்றப்படுவதை எங்களின் மக்கள் உணரவில்லை. அவர்கள் எங்களை சுரண்டுகிறார்கள். ஆனாலும் நாங்கள் அவர்களுக்காக சென்று வேலை பார்க்கிறோம். நான் செல்வதில்லை," என்கிறார் 21 வயதாகும் விஷ்ணு. அவர் பக்கத்து கிராமங்களிலிருந்து கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்கிறார்.
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள சுதாகத் ஒன்றியத்தின் நட்சுர் பஞ்சாயத்தில் இருக்கும் கிராமம் நட்சுர் கட்காரிவாடி. இங்கு இருக்கும் 360 கட்காரி ஆதிவாசி மக்களில் பெரும்பாலானோர் ஒவ்வொரு தீபாவளி போதும் இடம் பெயர்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சிப்லன், அமராவதி போன்ற இடங்களில் இருக்கும் சூளைகளில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள். ஜூன் மாதம் தொடங்கியதும் தங்களின் கிராமங்களுக்கு திரும்புகிறார்கள். கருவேல மரங்களில் இருந்து கரி தயாரிக்கிறார்கள். பெரிய உணவகங்களில் தந்தூரி அடுப்புகளிலும் பார்பிக்யூ அடுப்புகளிலும் அந்த கரி பயன்படுத்தப்படுகிறது.
தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மகாராஷ்டிராவின் உள்ளே இருக்கும் சூளைகளை அடைய மட்டும் 18 மணி நேரங்கள் ஆகின்றன. பிற மாநிலங்களை அடைய 38 மணி நேரங்களாவது ஆகின்றன. செல்லும் இடங்களில் உள்ள திறந்தவெளிகளில் வைக்கோல், மூங்கில், கரும்பு சக்கை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான குடியிருப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். மின்சாரமும் கழிப்பறை இல்லாமல் எப்போதும் பாம்புகளுக்கு மிருகங்களுக்கும் பயந்துகொண்டே அவர்கள் அங்கு வாழ்க்கையை கழிக்கிறார்கள்.





