மார்ச் 10, 2018ல் அட்டங்கி நகரில், "ராம ராவண யுத்தத்தை" நிகழ்த்தினார்கள். அட்டங்கி கலா பீடத்தின் 20வது ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அட்டங்கி கலா பீடம் ப்ரகாசம் நகரில் நாட்டுப்புறக் கலைகளை ஊக்கப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். ராமனுக்கும் ராவணனுக்கு நடுவில் நடக்கும் போரை விவரிக்கும் நாடகம், தீமைக்கும் நன்மைக்கும் நடுவில் நடப்பனவற்றைக் குறிப்பதாகும். இரவு பதினொரு மணி அளவிலும் ஆண்களும் பெண்களும் இருந்து நாடகத்தைப் பார்த்தார்கள். பீடி புகைத்துக்கொண்டிருந்த 74 வயது மணிக்யாலா ராவ் கொட்டாவி விட்டபடியே சொன்னார் "பொம்மலாட்டத்தைப் பார்த்து பல நாட்களாகிவிட்டது. இரவு தாமதமானாலும் நான் இருப்பதற்குக் காரணம் இதுதான்"
ஆந்திராவைப் பொறுத்தவரை, எப்படியோ தொழிலை நடத்திவரும் பொம்மலாட்டக் குழுக்களில் கோட்டிலிங்கத்தின் 10 பேர் கொண்ட குழுவும் ஒன்று. மஹாராஷ்ட்ராவைப் பூர்விகமாகக் கொண்ட ஆர்யஷத்திரிய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான் கோட்டிலிங்கத்தின் உறவினர்கள். ஆந்திராவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளான குண்டூர் மற்றும் ப்ரகாசம் மாவட்டங்களில் வாழும் அவர்கள் அட்டங்கி, தர்சி மற்றும் ஓங்கோல் சிறு நகரங்களில் கூலியாட்களாக பணிபுரிகிறார்கள். மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்துவதற்காக அணுகப்படும்பொழுதுதான் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.
அவர்களது பழம்பெரும் கலைக்கும், சத்ரபதி சிவாஜியில் மராட்டிய ராஜ்ஜியத்திற்குமான இணைப்பைக் குறித்து கூறுகிறார் 45 வயது வனபார்த்தி ராமானுஜெயம்மா. செர்ஃபோஜி, வெங்கோஜி ஆகிய சிவாஜியின் சகோதரர்கள், மதுரை - தஞ்சாவூர் மண்டலத்தில் 17வது நூற்றாண்டில் வளர்த்த கலை வடிவங்களில், ஆர்யஷத்திரிய சமூகம் வளர்த்த பொம்மலாட்டமும் ஒன்று என்கிறார் அவர்.
கோட்டிலிங்கும், ராமானுஜெயாம்மாவும் இக்கதையை விவரிக்கிறார்கள். "முன்னொரு காலத்தில், சோழ அரசனின் அரசவையில் இருந்த பிராமணர் ஒருவர், கம்சலுகளை (தற்போது ஆந்திராவின் கம்சலி சாதி) எதிர்த்து திட்டம் தீட்டி, அவர் ராஜ்ஜியத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக புனைவை உருவாக்கினார். கம்சலுக்களின் தலையை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் அரசர். கம்சலுக்களில் சிலர் உயிர்பிழைத்து காடுகளுக்குள் தப்பினர். இறந்த விலங்குகளின் தோலில் பொம்மைகள் செய்து, வாழ்வாதாரத்திற்காகவும் மக்களை மகிழ்விக்கவும் இந்தக் கலைகளை உருவாக்கினார்கள் அம்மக்கள். இடையில், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கலையைக் கற்றுக்கொண்டார்கள். ஆறு மாதங்கள் ராமாயண நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு, அந்த பிராமணனையும், அரசரையும் கொல்லும் பொருட்டு, பொம்மலாட்டம் நடக்கும் மேடையிலிருந்து அரண்மனைக்கு வழிவகுத்தனர். ராவணனை ராமன் கொல்லும் இறுதி நிகழ்வன்று, அரசரையும் பிராமணனையும் கொன்றுவிட்டு, விருப்பத்தின் பெயரில் அக்கலையைப் பயின்றவர்களிடம் அந்தக் கலையை விட்டுவிட்டுச் சென்றனர் கம்சலுக்கள். நாட்கள் செல்லச்செல்ல, விருப்பத்தின் பெயரில் இதைக் கற்றுக்கொண்டவர்கள்தான் ஆரியஷத்தியர்கள் ஆனார்கள்.