தனது வாக்காளர் அடையாள அட்டை எனப்படும் வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு, “எனது விரல்களால் ஓட்டு போட முடியும் என்றால், அவை ஏன் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு ஏதுவானதாக இல்லை?“ என்று 51 வயதான பார்வதி தேவி கேட்கிறார். அவர் 1995ம் ஆண்டு முதல் இந்த அடையாள அட்டை முலம் வாக்களித்து வருகிறார்.
பார்வதியின் விரல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் 2016 – 17ன் அறிக்கைப்படி, இந்நோய் 86 ஆயிரம் இந்தியர்களை பாதித்துள்ளது. இவை பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல் மட்டும்தான். அதற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும், தொழுநோய் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகம் முழுவதிலும் கண்டறியப்படும் நபர்களில் 5ல் மூன்றுக்கு மேற்பட்டோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.
மாநில அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500ஐ பெறுவதற்கு தடையாக இருக்கும் பூட்டுகளை திறக்கும் முக்கியமான சாவியான ஆதார் அட்டை பெறும் அவரின் முயற்சிகளுக்கு அந்த நோய் தடையாக உள்ளது.
“என்னிடம் ஆதார் அடையாள அட்டை இருந்தால், என்னால் உதவித்தொகை பெற முடியும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது மகன் என்னிடம் கூறினார். அப்போது முதல் நான் ஆதார் அட்டை பெறுவதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருகிறேன். ஆனால், சரியான விரல்கள் இல்லாமல் என்னால் அதைப் பெற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்“ என்று அவர் கூறுகிறார்.





