“ஒன்றும் தவறாக நடக்கவில்லை, எதுவும் அசாதாரணம் இல்லை, எல்லாம் நன்றாக இருந்தது, வாழ்க்கை எளிமையாக சென்று கொண்டிருந்தது,” என்கிறார் 33 வயதாகும் தினேஷ் சந்திரா சுதார். நினைத்து பார்க்க முடியாத அச்சம்பவத்தை நினைவுகூர்ந்தபடி தனது குடும்பத்தின் கோப்புகள், அறிக்கைகளுக்கு மத்தியில் அவர் அமர்ந்திருக்கிறார்.
ராஜஸ்தானின் பன்சி கிராமத்தில் உள்ள சுதார் வீட்டுச் சுவரில், இறந்துபோன அவரது மனைவியின் புகைப்படங்கள் தொங்குகின்றன. தினேஷின் கோப்புகளில் உள்ள அதே புகைப்படங்கள் தான். 2015ஆம் ஆண்டு திருமணமாகி சில மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம். அரசுத் திட்டமொன்றுக்கான விண்ணப்பப்படிவத்திலும் இப்புகைப்படமே இடம்பெறுகிறது.
குறுகிய காலமே நீடித்த தனது திருமண வாழ்விற்கான இக்காகித அடையாளங்களை, புகைப்படங்களை தினேஷ் ஐந்தாண்டுகளாக வைத்திருக்கிறார். அவர் மூன்று வயதாகும் சிராக், தேவான்ஷ் ஆகிய இரு குழந்தைகளின் தந்தை. தேவான்ஷ் பிறந்து வெறும் 29 நாட்களே ஆகியிருந்த நிலையில், பாவ்னாவிற்கு பாரி சத்ரி நகராட்சியில் உள்ள 50 படுக்கை வசதி கொண்ட சமுதாய சுகாதார மையத்தில் (சிஹெச்சி) குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபோது குடல் கிழிந்து உயிரிழந்தார்.
பி.எட் பட்டதாரியான தினேஷ் பன்சியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்வாலில் தனியார் பள்ளி ஆசிரியராக ரூ.15,000 சம்பளம் பெறுகிறார். சம்பவங்களை கோர்வையாக சொல்வதற்கு முயற்சிக்கிறார், சிறிய தவறு அவர்களின் வாழ்வையே புரட்டிவிட்டது. தவறுகளை அவர் தன்மீது சுமத்திக் கொள்கிறார்.
“எல்லாம் சரியாக நடக்கும் என மருத்துவர் அளித்த உறுதியை நம்பி அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டது நான்தானே? நான் இன்னும் தகவல்களை கேட்டிருக்க வேண்டும். அந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்க கூடாது. யாரையும் நம்பியிருக்கக் கூடாது. அது என் தவறு,” என்கிறார் தினேஷ். 2019ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அவரது மனைவி இறந்தது முதல் எண்ணற்ற கொல்லும் நினைவுகளை அசைபோட்டபடி இருக்கிறார்.
25 வயதான பாவ்னா 2019, ஜூன் 25ஆம் தேதி இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு தனது இரண்டாவது பிரசவத்தில் தேவன்ஷ் எனும் ஆண் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்தார். முதல் பிரசவத்தை போன்று இரண்டாவதும் எளிதாக அமைந்தது. தங்கள் கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தார்கார் மாவட்டம் பாரி சத்ரி வட்டாரத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்தில் நடைபெற்ற பிரசவம், அவரது அறிக்கைகள், பரிசோதனைகள் யாவும் இயல்பாகவே இருந்துள்ளன.







