மே 1ம் தேதி, சர்வதேச உழைப்பாளர்கள் தினம், கோண்டியாவின் பெண் தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், நாங்கள் இதை மீண்டும் பிரசுரிக்கிறோம். இந்த கட்டுரை முதலில் 2007ம் ஆண்டு ஜனவரி 27 அன்று இந்து பத்திரிக்கையில் பிரசுரமானபோது இருந்ததைவிட பெரியளவில் அவர்கள் முன்னேறவில்லை.
ரேவன்டாபாய் காம்ப்ளி, தனது 6 வயது மகனுடன் சில மாதங்களாக பேசவில்லை. இத்தனைக்கும் அவர்கள் திரோராவில் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். புரிபாய் நாக்பூரியும் தனது மூத்த மகனை, சில நேரங்களில் அவர் அதிகாலை எழுந்துவிட்டால் மட்டுமே பார்க்கிறார். இவர்கள் இருவரும் மஹாராஷ்ட்ராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள இப்பகுதியிலிருந்து ஒவ்வொரு வாரமும் தினமும் ரூ.30 கூலிக்காக ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் நூற்றுக்கணக்கான பெண்களில் அடங்குவர். அவர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.
நாம் அந்தப்பெண்களுடன் சேர்ந்து அவர்களின் வீட்டில் இருந்து ரயில் நிலையம் சென்றபோது மணி காலை 6. அதில் பெரும்பாலானோர் எழுந்து ஏற்கனவே 2 மணி நேரமாகிவிட்டது. “நான் சமையல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல் மற்றும் சுத்தம் செய்தல் என அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டேன்“ என உற்சாகமாக கூறுகிறார் புரிபாய். “எனவே நாம் இப்போது பேசலாம்“ என்கிறார் அவர். நாங்கள் வந்தபோது அவர் வீட்டில் இருந்த வேறு ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. “கொஞ்சம் கஷ்டம்தான். அவர்கள் சோர்வாக இருப்பார்கள்“ என்று அவர் கூறுகிறார். புரிபாயும்தான் சோர்வாக இருப்பாரே? என்றால், “ஆமாம், என்ன செய்வது? எங்களுக்கு வேறு வழி இல்லையே“ என்கிறார்.
அந்த ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பெரும்பாலான பெண்களுக்கும் வேறு வழியில்லைதான். ஒருவகையில் இது வழக்கமான ஒன்றல்ல. அவர்கள் அனைவரும் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்பவர்கள் கிடையாது. அவர்கள் எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு சென்று வேலை செய்யும் பணியாள்ரகள். அவர்கள் நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். இது அவர்களை ஊர்புறத்தில் உள்ள நகரான திரோரா, அந்த வட்டத்தின் தலைடைமயிடம், இங்கிருந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக தினமும் கிராமங்களுக்கு செல்லும் விவசாய கூலித்தொழிலாளர்களாக்கியுள்ளது. அவர்கள் தினமும் 20 மணி நேரம் வீட்டிலிருந்து வெளியே நேரம் செலவிடுகின்றனர். அவர்களுக்கு வார இறுதிநாட்கள் விடுமுறை கிடையாது. திரோராவிலும் வேலை இல்லை. “பீடித்தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் இங்கு வேலை இல்லை“ என்று மகேந்திரா வால்டே கூறுகிறார். இவர் கோண்டியாவில் உள்ள விவசாயிகள் சபையின் மாவட்ட செயலாளர். “அவர்களுக்கு இங்கு வேலை தேடிக்கொள்வது முடியாத காரியம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.








