“எங்கள் கிராமத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்திலும் வேலை கிடைப்பது அரிதாக உள்ளது” என்றார் ஜங்கம் தனலட்சுமி. மேலும், ”அனைத்து விவசாய நிலங்களும் மீன் வளர்ப்புக் குளங்களாக மாற்றப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின், தமிரிசா கிராமப்பகுதியில் உள்ள குக்கிரமமான அங்கேன்னகுடம் பகுதியில், 40 வயதுடைய தனலட்சுமி(முகப்பு படத்தில் உள்ளவர்) வசித்து வருகிறார். இவர் விவசாய வேலைகளுக்கு செல்வதற்காகத் தினந்தோறும் ஏறத்தாழ 60 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக அவரது தினக்கூலியான 200 ரூபாயில், நான்கில் ஒரு பங்கை ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பதற்காகவே செலவழித்து வருகிறார். இந்தக் சிறுகிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஏறத்தாழ 450 பேர் வசித்து வருகின்றனர்.
“அவ்வளவு தூரம் பயணித்தும், ஏப்ரலில் 10 நாட்களும், ஆகஸ்டில் 10 நாட்களும், விவசாய வேலைகள் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதத்தில் 10 நாட்களும் ஆக மொத்தமாக வருடத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலைக்கிடைக்கிறது.” என தனலட்சுமியின் அண்டைவீட்டாரன 60 வயதுடைய கண்டா சரோஜா கூறினார். இதனால் விவசாய வேலையின் வழியாக இந்த குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வருடத்திற்கு 5,000-6,000 வரை மட்டுமே வருமானம் ஈட்ட முடிகிறது. இதன் காரணமாக பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், “கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு முன்னர், இந்தக் கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்தன. தற்போது 60 குடும்பங்கள் இருப்பதே அரிது.” என கூறிய சரோஜா, “சிலர் குடிவாடா, விஜயவாடா மற்றும் ஹைதராபாத் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பிறர் வேலை தேடுவதற்காக அவர்களது உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்.
அங்கேன்னகுடம், நந்திவாடா மண்டல் பகுதியில் உள்ள ஊராகும். இதில் ஏறத்தாழ 36,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நந்திவாடா பகுதியில் மீன் வளர்ப்பின் மூலமாக கிடைக்கும் அதிக வருவாயின் காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்திலேயே இரண்டாவது (விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அச்சுதபுறம் மண்டல் பகுதிக்கு அடுத்து) அதிக தனிநபர் வருமானம் ஈட்டக்கூடிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மீன்கள் மீன்வளர்ப்பு செயலாக்க அலகுகளில்(aqua processing units)பயன்படுத்தப்படுகிறது மற்றும் கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2014-15 ஆண்டின், மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, நந்திவாடா பகுதியில் தனிநபர் ஆண்டு வருவாய் ருபாய் 308,371 ஆகும். இதேவேளையில், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளவர்களின் மொத்த வருமானம் அதே ஆண்டில் ருபாய் 140,628 ஆகும்.






